ஜோ லோ மீதான பிடி இறுகுகிறது: பொதுமன்னிப்பு கோரிக்கைக்கு மத்தியிலும் விசாரணையை தீவிரப்படுத்தும் புக்கிட் அமான்

கோலாலம்பூர்:

1எம்.டி.பி (1MDB) ஊழல் வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய நபரான மலேசிய நிதியாளர் லோ டக் ஜோ (ஜோ லோ), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பொதுமன்னிப்பு கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அவர் மீதான சட்ட ரீதியான விசாரணைகளில் எவ்வித சமரசமும் இன்றி விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என புக்கிட் அமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை நடைபெற்ற ‘சிறப்பு உரையாடல் (PSD V) 2026’ நிகழ்வின் நிறைவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய போலீஸ் படைத்தலைவர் (IGP) டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இதனை உறுதிப்படுத்தினார். ஜோ லோ வெளிநாட்டில் பதுங்கியிருந்தாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகள் கைவிடப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

“ஜோ லோ தொடர்பான விசாரணைகளைத் தொய்வின்றி முன்னெடுக்க, தொடர்புடைய நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுடன் மலேசிய போலீசார் மிக நெருக்கமான மற்றும் இணக்கமான உறவைத் தொடர்ந்து பேணி வருகின்றனர்,” என்று முகமட் காலிட் தெரிவித்தார்.

அமெரிக்க நீதித்துறையின் (DOJ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜோ லோ தனது வழக்கறிஞர்கள் வாயிலாக அதிபர் டிரம்பிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பம் சமர்ப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி மலேசிய அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்துக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள 1எம்.டி.பி பணிக்குழுவின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி, “மலேசிய மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய ஒருவருக்கு எக்காரணம் கொண்டும் பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். இத்தகைய மன்னிப்பு நடவடிக்கைகள் சர்வதேச நீதி பரிபாலனத்திற்கு தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜோ லோவை மலேசியாவிற்கு நாடு கடத்துவதற்கான சர்வதேச பிடியாணைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை மலேசிய அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here