கோலாலம்பூர்:
இந்த மாத தொடக்கத்தில் ஜாலான் அம்பாங் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து தொடர்பாக, 24 வயது இளைஞர் மீது இன்று நீதிமன்றத்தில் இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
டானிஷ் ராமன் குமார் குமரேசன் (வயது 24) என்ற அந்த இளைஞர், மாஜிஸ்திரேட் நூருல் இசா ஹசன் பஸ்ரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
மே 2-ஆம் தேதி காலை சுமார் 5.30 மணியளவில், கே.எல்.சி.சி-யிலிருந்து அம்பாங் பாயிண்ட் நோக்கிச் செல்லும் ஜாலான் அம்பாங் சாலையில், ஏ. துரைசிங்கம் (65) என்பவரது மரணத்திற்குக் காரணமாக இருந்தது.
இரண்டாவது குற்றச்சாட்டு, அதே நேரம் மற்றும் அதே இடத்தில் ஏ. மேனகா (56) என்பவரைக் கொலை செய்தது என அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் (கொலை குற்றம்) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், கட்டாய மரண தண்டனை, அல்லது
30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன், 12 கசையடிகளுக்கு குறையாத தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த விபத்து மலேசியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் சமீபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், போதையில் வாகனம் ஓட்டுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















