கோலாலம்பூர்:
மலேசியாவில் பணிபுரியும் ஊழியர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் (59.2%) அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று PERKESO சமூகப் பாதுகாப்பு அமைப்பு நடத்திய சுகாதாரப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மலேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற “PERKESO Run” நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய மனிதவளத் துணை அமைச்சர் கைரூல் ஃபிர்டாவுஸ் அக்பர் கான் இந்த விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 59.2% பேர் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர்.
சுமார் 59.24% ஊழியர்களுக்கு உடலில் அதிக கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, 40 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களிடையே இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஊழியர்களில் 19% பேருக்கு நீரிழிவு நோயும், 17.45% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலேசியர்களின் இறப்பிற்கு மூன்றாவது முக்கியக் காரணமாக விளங்கும் புற்றுநோய், தற்போது இளம் வயதினரையும் பெருமளவில் பாதித்து வருவது குறித்து துணை அமைச்சர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.
“பணி ஓய்வுக்கு முந்தைய காலகட்டம் மிகவும் முக்கியமானது. இந்த காலகட்டத்தில்தான் தொற்றாத நோய்கள் (NCDs) மனிதர்களைத் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே, ஊழியர்கள் தங்கள் உடல்நலனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முறையான விழிப்புணர்வுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், சமச்சீர் உணவுப் பழக்கத்தையும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று கைரூல் ஃபிர்டாவுஸ் அறிவுறுத்தினார்.





















