கச்சத்தீவு என்னாச்சு? இந்தியாவிடம் திரும்ப கொடுத்தாச்சா?

கொழும்பு: கச்சத்தீவு பகுதியை இந்தியாவிடம் இலங்கை திரும்ப ஒப்படைத்துவிட்டதா? இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதி கடற்பரப்பும் இந்தியாவிடம் வழங்கப்பட்டு விட்டதா? என சிங்கள எம்.பி. சரமாரியாக எழுப்பிய கேள்விகளால் இலங்கை நாடாளுமன்றம் அதிர்ந்தது.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்த சட்ட மசோதா மீது விவாதம் அண்மையில் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது இலங்கை எதிர்க்கட்சி எம்.பி. நிரோஷன் பெரேரா சில கேள்விகளை சரமாரியாக முன்வைத்தார்.

கச்சத்தீவை கொடுத்தாச்சா?: நிரோஷன் பெரேரா பேசுகையில், இந்திய மீனவர்களுக்கு லைசென்ஸ் மூலம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பது குறித்து பிரதமர் தினேஷ் குணவர்த்தன கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அண்மையில் இந்தியா சென்றிருந்தார். ரணில் விக்கிரமசிங்கேவின் இந்த பயணத்தின் போது கச்சத்தீவு மற்றும் இலங்கையின் வடக்கு கடற்பரப்பு ஆகியவை இந்தியாவிடம் கொடுக்கப்பட்டதா? என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனால் இலங்கையின் வடபகுதி கடல் தொழிலாளர்கள், மீனவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர் என்றார்.

டக்ளஸ் தந்த பதில்: இதற்கு இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அளித்த பதில்: கச்சத்தீவு இலங்கைக்கு திருப்பிக் கொடுக்கப்படுவதாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை இந்திய இழுவைப் படகுகளை இலங்கையின் கடற்பரப்புக்குள் ஒரு வினாடி கூட அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா பதிலளித்துள்ளார்.

கச்சத்தீவு: தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி கச்சத்தீவு. இது மத்திய அரசால் தன்னிச்சையாக இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இருந்த போதும் கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கவும் மீன்பிடி வலைகளை உலர்த்தவும் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்கவும் உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை கடற்படை தமிழ்நாட்டின் கூப்பிடு தொலைவில் உள்ள கச்சத்தீவு பக்கம் தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளைப் பார்த்தாலே சுட்டுப் படுகொலை செய்வது; கைது செய்வது; கொடூரமாகத் தாக்குவது என்ற போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்வாதாரமும் மீன்பிடித் தொழிலும் பெரும் கேள்விக்குறியானது. இதனையடுத்தே கச்சத்தீவை மீண்டும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால வேண்டுகோள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here