250 அரிய வனவிலங்குகளை இந்தியாவுக்குக் கடத்த முயன்ற மலேசியர் பேங்காக்கில் கைது!

கோலாலம்பூர்:

பேங்காக்கிலிருந்து இந்தியாவிற்குப் பெட்டிகளில் அடைத்து, உயிருடன் கடத்த முயன்ற 250-க்கும் மேற்பட்ட அரிய வகை வனவிலங்குகளைத் தாய்லாந்து அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 34 வயது மலேசிய ஆடவர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.

பேங்காக், சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் (Suvarnabhumi Airport) கடந்த மே 24-ஆம் தேதி அதிகாலை இந்தச் சர்வதேச கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

தாய்லாந்தின் தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புத் துறையும் (DNP), அங்குள்ள பல்வேறு பாதுகாப்பு அமலாக்க அமைப்புகளும் இணைந்து நள்ளிரவில் விமான நிலையத்தில் ரகசியக் கூட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

அப்போது, அதிகாலை 3.45 மணியளவில் விமான நிலையத்தின் எஃப்3 (F3) ஏறுவழி (Boarding Gate) அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய 34 வயது மலேசிய ஆடவரை அதிகாரிகள் மறித்துச் சோதனை செய்தனர். அவர் பேங்காக்கிலிருந்து இந்தியாவின் கோல்கத்தா (Kolkata) நகரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லவிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

அவரது பெரிய பயண உடைமைப் பெட்டிகளை (Luggage) அதிகாரிகள் ஸ்கேன் செய்து, திறந்து சோதனை செய்தபோது அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் எவ்விதக் காற்றோட்டமும் இன்றி, சட்டவிரோதமாகப் பல நூறு அரிய வகை விலங்குகள் உயிருடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 100 நீலநாக்கு அரணைகள் (Blue-tongued Skinks), 80 நன்னீர் ஆமைகள் (Freshwater Turtles), 5 உடும்புகள் (Monitor Lizards), 2 இருவாய்ச்சிக் குருவிகள் (Hornbills) இவை தவிர மேலும் பல அரிய வகை காட்டுயிர்கள் என மொத்தம் 250-க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட அந்த மலேசியக் கடத்தல்காரர் மேல் நடவடிக்கைக்காக உடனடியாக விசரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். பெட்டிகளுக்குள் உயிருடன் மீட்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் உடனடியாகத் தாய்லாந்து வனவிலங்கு மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் (Wildlife Authorities) ஒப்படைக்கப்பட்டு, அவசர மருத்துவப் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் பல்லுயிர்ச் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த விலங்குக் கடத்தல் நெட்வொர்க்கின் பின்னணியில், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் இருக்கும் வேறு ஏதேனும் சர்வதேச கும்பல்களுக்குத் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் அதிகாரிகள் தங்களது விசாரணையை அதிரடியாக விரிவுபடுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here