மலாக்காவில் அதிர்ச்சி — மெத்தைக்குள் கட்டிப்போடப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

( ரெ.மாலினி)

மலாக்கா:

போகோக் மாங்கா பகுதியில் உள்ள ஒரு கடை வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் ஒரு சடலத்தின் மர்மமான கண்டுபிடிப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

அந்தச் சடலம் நேற்று இரவு அழுகிய நிலையில், மடிக்கப்பட்ட மெத்தைக்குள் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று மாலை சுமார் 7 மணியளவில், அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டைச் சோதிக்கச் சென்றபோது இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் அளித்ததாக தெரிவித்தார்.

அவரின் கூற்றுப்படி, வீட்டின் உரிமையாளர் பல நாட்களாக வாடகையாளரை தொடர்புக் கொள்ள முடியாமல் இருந்ததால் வீட்டைச் சோதிக்க சென்றுள்ளார். வீட்டுக்குள் நுழைந்தவுடன் கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மிகவும் அழுகிய நிலையில் இருந்த ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் இரண்டு வாரங்களுக்கும் ஒரு மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்திற்கு முன்பே இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

“சடலம் மடிக்கப்பட்ட மெத்தைக்குள் சுற்றப்பட்டிருந்தது. மேலும், இரு கைகளும் கட்டப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இதனால் இதுக் கொலைச் சம்பவம் என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை,” என்று,மலாக்கா போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மலிம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற மேலாண்மைத் துறைத் தலைவர், மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் மற்றும் பேர்கேப் அமைப்பின் பொறுப்பேற்பு விழாவில் பேசுகையில் கூறினார்.

மேலும் விசாரணையில், சடலத்தின் நிலை மிகவும் சேதமடைந்திருந்ததால் அதன் பாலினம் மற்றும் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்குடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு மலாய் ஆண் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில், சந்தேக நபர் “ஷாபு” போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. மேலும், அவருக்கு ஏழு பழைய குற்றப் பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

அந்த வீடு ஒரு பெண்ணுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவரது மகன் அங்கு வசித்து வந்ததாகவும், உயிரிழந்த நபருக்கும் அந்த குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீஸ் நம்புகிறது.

கைது செய்யப்பட்ட போது சந்தேக நபர் போதை நிலையில் இருந்ததால், ஆரம்ப கட்ட விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கு, கொலைக் குற்றத்திற்கான மலேசிய குற்றச் சட்டம் பிரிவு 302ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here