(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜோகூர் மக்களான பங்சா ஜோகூர் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஒன் ஹாஃபிஸ் காஸி தலைமையிலான தேசிய முன்னணி மாநில அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்த நிர்வாக அனுபவம் மற்றும் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு, “மாஜு ஜோகூர், நிலைத்தன்மை தொடரட்டும், முன்னேற்றம் நீடிக்கட்டும்” என்ற கருப்பொருளில், மாஜு ஜோகூர் ஆறு முக்கிய தூண்களை மையமாகக் கொண்ட 63 உறுதிமொழிகளை உள்ளடக்கிய பாரிசான் நேஷனல் ஜோகூர் தேர்தல் அறிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஒன் ஹபீஸ் கூறினார்.
அதில் முக்கியமாக, இலக்குடன் கூடிய பந்துவான் காசிஹ் ஜோகூர் (BKJ) உதவித் திட்டத்தை வலுப்படுத்துதல், இளைஞர்களுக்கான வீட்டு வாடகை முன்பண உதவித் திட்டம், 100 மில்லியன் நிதியின் மூலம் மானிய வீடுகளுக்கான அணுகலை அதிகரித்தல், முதல் வீட்டு உதவி, வீட்டில் குடியேறும் உதவி மற்றும் வாடகை உதவியைத் தொடருதல், ஜோகூர் இளைஞர்களுக்காக 2 இலட்சம் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சிறு வணிகர்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு முதல் ஆண்டு வணிக உரிமக் கட்டண விலக்கு, 100 மில்லியன் வட்டியில்லா குறு நிதி வசதி, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மூலோபாய முதலீட்டு விநியோகச் சங்கிலியுடன் இணைத்தல், 100 மில்லியன் கல்வி நிதியை வலுப்படுத்துதல், ஜோகூர் மாணவர்களுக்கான ஊக்கத்தொகையைத் தொடருதல் மற்றும் செமாராக் இஷா’ திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக அவர் விளக்கினார்.

இந்த உறுதிமொழிகள் அனைத்தும் மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்றும், வேலைவாய்ப்பு, தொழில், வீடமைப்பு, கல்வி மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார். இவை வெறும் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல; நிர்வாக அனுபவம், நிரூபிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் ஜோகூரை மேலும் முன்னேற்றும் உறுதியின் வெளிப்பாடாகும் என்றார்.
இதுவரை விதைக்கப்பட்ட வளர்ச்சியின் விதைகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்றும், அந்த வளர்ச்சி வேகம் பாதியில் நின்றுவிடாமல் இருக்க ஜோகூர் மக்கள் மீண்டும் முழுமையான ஆதரவை தேசிய முன்னணிக்கு வழங்க வேண்டும் என ஒன் ஹாஃபிஸ் அழைப்பு விடுத்தார். ஜோகூரை மேலும் முன்னேறிய, வளமான மற்றும் நலமிக்க மாநிலமாக மாற்ற இந்தத் தேர்தலில் பாரிசான் நேஷனலுக்கு முழுமையான ஆணையை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.




















