கோலாலம்பூர் :
தனது 14 வயது தங்கையை மலேசியாவிற்கு வழியனுப்பி வைப்பதற்காக சட்டவிரோதப் படகுத்துறை வழியாக எல்லையைக் கடக்க முயன்ற 19 வயது தாய்லாந்து இளைஞர், தனது தங்கையுடன் சேர்த்துப் பொது அதிரடிப் படையினரால் (GOF) கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6:45 மணியளவில் கோலோக் ஆற்றை (Golok River) படகு மூலம் கடந்து, இங்குள்ள ‘கெடாப்’ (Kedap) சட்டவிரோதப் படகுத்துறையில் தரையிறங்கியபோது இருவரும் பிடிபட்டனர்.
ஓப் தாறிங் வாவசான் கிளாந்தான்’ (Op Taring Wawasan Kelantan) நடவடிக்கையின் போது, காவல் துறையின் வான்வழிப் பிரிவு ட்ரோன் (Drone) உதவியுடன், ஒன்பதாவது பட்டாலியனைச் சேர்ந்த GOF படையினர் எல்லையைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
தாய்லாந்து கரையில் இருந்து இருவரை ஏற்றிக்கொண்டு மலேசியப் பக்கத்தை நோக்கி வந்த படகை கண்காணித்த அதிகாரிகள், அவர்கள் தரையிறங்கியதும் உடனடியாகச் சூழ்ந்து மடக்கிப் பிடித்தனர்.
அதிகாரிகளின் சோதனையின் போது 19 வயது இளைஞரிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆனால், அவரது 14 வயது தங்கையிடம் மலேசிய அடையாள அட்டை (MyKad) இருந்தது.
விசாரணையில் இருவரும் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என்பதும், அண்ணன் தாய்லாந்திலும், தங்கை மலேசியாவிலும் பிறந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
கடந்த ஜூலை 17 அன்று குடும்ப விஷ்யம் தொடர்பாகச் சட்டவிரோதப் படகுத்துறை வழியே தாய்லாந்திற்குச் சென்ற அந்தச் சிறுமி, ஜோகூர், குலாயில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்புவதற்காக அண்ணனுடன் வந்துள்ளார். இதற்காக அவர்கள் படகுக் கட்டணமாக RM30 செலுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேல் நடவடிக்கைக்காகப் பாசிர் மாஸ் (Pasir Mas) மாவட்டக் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து குடிவரவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 5(2) மற்றும் பிரிவு 6(1)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




















