கோலாலம்பூர்:
பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் செவித்திறன் குறைபாடுள்ள இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஓங் இங் கியோங் (Ong Ing Keong), இச்சம்பவம் தொடர்பாகவும் காவல் துறை அறிக்கையைத் தவறாகக் கையாண்டதாகக் கூறியும் உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2024 மே 28 அன்று ‘சென் ரெஜிஸ்’ (St Regis) ஹோட்டல் அருகே தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், காவல்துறை அதிகாரி முகமட் தவ்ஃபிக் இஸ்மாயில், காவல் தலைவர்கள் மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகியோரைப் பிரதிவாதிகளாகப் பெயரிட்டுள்ளார்.
தமது வாகனத்தில் இருந்த டேஷ்கேம் காணொளியை அழிக்கவும், காவல் துறை அறிக்கையைத் திரும்பப் பெறவும் அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும், மாற்றுத்திறனாளியான தமக்கு சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் வழங்கப்படவில்லை என்றும் அவர் தமது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே இத்தாக்குதல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முகமட் தவ்ஃபிக்கிற்கு மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் 1,000 ரிங்கிட் அபராதம் விதித்திருந்த நிலையில், தற்போது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக இழப்பீடு கோரி இச்சிவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.




















