கோலாலம்பூர்:
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஸ் கட்சியின் “அதிதீவிர” கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கெராக்கான் கட்சியின் தேசியப் பொருளாளர் எங் சி வே தனது பதவியையும் கட்சி உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 31 ஆண்டுகளாக கெராக்கான் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த இவர், சுமார் 9 மாத யோசனைக்குப் பிறகு இக்கடினமான முடிவை எடுத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கெராக்கான் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே பாஸ் கட்சியுடனான பிணைப்பு குறித்துக் கடுமையான அதிருப்தி நிலவி வருவதாக உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஸ் கட்சியின் தீவிரப் போக்கிற்கு எதிராகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கெராக்கான் வலுவான நிலையை எடுக்கத் தவறிவிட்டதாகவும், இதனால் கட்சி தனது ஆரம்பகாலக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதாகவும் உறுப்பினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தனது ராஜினாமா குறித்து எங் சி வே கூறுகையில், “கட்சியில் உள்ள தலைவர்களுடனோ அல்லது உறுப்பினர்களுடனோ எனக்கு எவ்வித தனிப்பட்டப் புகார்களும் இல்லை. ஆனால், எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்னால் இனியும் எதையும் செய்ய முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. தற்போதைக்கு அரசியலிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கத் தீர்மானித்துள்ளேன்,” என்று கூறினார்.
எங் சி வே அவர்களின் இந்தத் திடீர் முடிவு தங்களுக்குப் பெரு அதிர்ச்சியளிப்பதாகக் கெராக்கான் துணைத் தலைவரும் பினாங்கு மாநிலத் தலைவருமான ஓ தோங் கியோங் தெரிவித்துள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், பினாங்கு மற்றும் பிற மாநிலங்களில் மலாய் அல்லாத வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் கெராக்கான் பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், மூத்த தலைவரின் இந்த விலகல் ‘ஆரம்பப் புள்ளிதான்’ என்றும், மேலும் பலர் விலகக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன.
























