புதிய கவாஸாகி டபிள்யூ800 பைக் இந்தியாவில் அறிமுகம்

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன்கூடிய புத்தம் புதிய மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது கவாஸாகி நிறுவனம்.

கவாஸாகி டபிள்யூ-800 ஸ்ட்ரீட் என்ற பெயரில் வந்துள்ள இப்புதிய மோட்டார் சைக்கிள்  தனித்துவமான பிரிமீயம் பைக் பிரியர்களையும், பழமையை போற்றும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களையும் வெகுவாக கவரும்.

1965ம் ஆண்டு காலக்கட்டத்தில் கவாஸாகி நிறுவனம் தயாரித்த W1 என்ற மோட்டார் சைக்கிளின் டிசைன்  அம்சங்களுடன்கூடிய நவீன யுக மோட்டார் சைக்கிள் மாடலாக இது இந்தியாவில் களம் இறங்கியுள்ளது.பாரம்பரிய மோட்டார் சைக்கிள்களில் காணப்படும் வட்ட வடிவிலான ஹெட்லைட் அமைப்பு, பெட்ரோல் டேங்க், ஸ்போக்ஸ் வீல், இருக்கை, சைலென்சர் ஆகியவற்றுடன் இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இப்புதிய  மோட்டார் சைக்கிளில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடன் கூடிய 773 சிசி ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பவரை வெளிப்படுத்தும் திறன் குறித்த தகவல் இன்னும்  வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மோட்டார் சைக்கிளில் 62.9 என்எம் டார்க் திறனை அளிக்க வல்லதாக இருக்கும்.

இப்புதிய மோட்டார் சைக்கிளானது டபுள் கிராடில் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில், முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்,  பின்சக்கரத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

18 அங்குல அலுமினியம் ஸ்போக்ஸ் சக்கரம், ஸ்லிப்பர் கிளட்ச், 5 விதமான நிலைகளில் மாற்றும் வசதியுடன்  கிளட்ச் லிவர், 4 வே அட்ஜெஸ்ட் வசதியுடன் பிரேக் லிவர், இரட்டை சைலென்சர், அடக்கமான சுவிட்ச் ஆகியவை இதன் நவீன தொழில்நுட்ப அம்சங்களாக உள்ளன. இந்த பைக்கில், இரட்டை டயல்களுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்  உள்ளது. அடுத்த மாதம் மத்தியில் டெலிவரி துவங்கும் என தெரிகிறது. ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் ஆகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here