தங்கப் பதக்கங்களை வென்று வரும் செஸ் சாம்பியன் ஜெனிதா!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி

திடகாத்திரமான ஆரோக்கியமான உடல் பலத்துடனும், யார் உதவியும் இல்லாமல் செயல்படும் திறனுடனும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் தட்டிவருவது ஒருவிதப் பெருமை என்றால், மாற்றுத்திறனாளியாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று வருவது ஈடில்லாப் பெருமை என்றே சொல்ல வேண்டும்.

சுலோவாகியா நாட்டின் ரூசம்பர்க் நகரத்தில் உலக மாற்றுத்திறனாளி தனிநபர் 19வது செஸ்போட்டி கடந்த ஜூன் 27ம் தேதி நடைபெற்றது. பதி்மூன்று நாடுகளிலிருந்து மொத்தம் 44 சர்வதேச வீரர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா ஆண்டோ, முதல் பரிசான தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். போலியோவால் இரண்டு கால்கள் மற்றும் வலது கை பாதிக்கப்பட்டிருக்கும் ஜெனிதா இதுவரை ஆறுமுறை சர்வதேசப் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஜெனிதா ஆண்டோ நம்முடன் பகிர்ந்துகொண்ட தகவல்களை இனி பார்ப்போம்.

“மூணு வயசு இருக்கும்போது எனக்கு போலியோ அட்டாக் வந்து என் கால்கள் இரண்டும் பாதிச்சு நடக்க முடியாம போயிருச்சு. அப்புறம் வலதுகையும் பாதிக்கப்பட்ருச்சு. இதனால ரொம்ப சிரமப்பட்டேன். ஸ்கூலுக்கு அப்பாதான் தூக்கிட்டுபோவார். மத்த குழந்தைங்க எல்லாம் விளையாடும் போது நம்ம குழந்தை இப்படியிருக்கேன்னு நினைச்சு அப்பா தான் சின்ன வயசுலே எனக்கு இந்த விளையாட்டை கத்துக்கொடுத்தார். நானும் ஆர்வமா கத்துக்கிட்டேன். ஆனா இப்படி உலகளவுல பெயர் வாங்குவேன்னு நினைச்சுக்கூட பார்க்கல. அதுக்கும் அப்பாதான் காரணம்” என தனது அப்பா காணிக்கை இருதயராஜை கைகாட்டும் ஜெனிதா படிப்பிலும் படுசுட்டி. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே நேரடிப் பள்ளிப் படிப்பு. அதிலும் வகுப்பில் முதல் மாணவி. அதன்பிறகு அஞ்சல்வழியில் பி.காம் வரை முடித்துள்ளார்.

“எனக்கு இரண்டு பெண் குழந்தைங்க. ஒரு பையன். நான் அரசு நடுநிலைப் பள்ளியில தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். எனக்கு ஜெனிதான் கடைசிக் குழந்தை. அவளுக்கு இந்த போலியோ அட்டாக் வந்ததும் என்ன பண்றதுன்னே தெரியல ரொம்ப ஒடஞ்சுபோயிட்டேன். எனக்கு காலேஜ் படிக்கும்போது செஸ் விளையாடுற பழக்கம் உண்டு.அதனால ஜெனிக்கும் அதை கத்துக்கொடுத்தேன். நல்லா பிக்கப் பண்ணிக்கிட்டா. ஒன்பது வயசுல 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்றாள்.

அடுத்து 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும் மாவட்ட அளவில் முதல்ல வந்தாள். இந்த நேரத்துல எனக்கு டிரான்ஸ்ஃபர் வந்துருச்சு. ஜெனிதாவைப் பள்ளிக்கு அழைச்சுப் போறதுல கஷ்டம் ஏற்பட்டுருச்சு. வேற வழியில்லாம பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளை தனித் தேர்வு எழுதி முடிச்சா. அடுத்து 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம். தேசியபோட்டியில் 14வது இடம் கிடைச்சது. பிறகு 2003ல் திருச்சி ‘பெல்’ நிறுவனத்தில் அகில இந்திய அளவில் உடல் ஊனமுற்றோருக்கான செஸ் போட்டி வந்தது. அதில் முதல் பரிசு கிடைச்சது. அப்புறம்தான் 2007-ல் சர்வதேச அளவில் விளையாடினா” என்கிறார் ஜெனிதாவின் தந்தையான காணிக்கை இருதயராஜ்.

மீண்டும் பேச ஆரம்பித்த ஜெனி, “2008-ல் 38வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்தது. இதில் உடல் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய ஆண், பெண் இருபாலரிலிருந்தும் பெஸ்ட் ப்ளேயர்ஸ் வருவாங்க. அதில் உடல் ஊனமுற்றோர் அணியும் விளையாடும். 114 நாடுகள் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் இந்தியா சார்பில் உடல் ஊனமுற்றோர் அணிக்கு விளையாடுவதற்காக நான் தேர்வு செய்யப்பட்டேன். இந்தியாவிலிருந்து இதுவரை இந்தப் பிரிவில் யாரும் போனதில்ல. 570 வீராங்கனைகளில் நான் 25வது இடத்தைப் பிடிச்சேன்.

பிறகு 2009-ல் இருபதாவது ஐரோப்பியன் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றேன். 2012-ல் அப்பா ஒரு விபத்தில் சிக்கிட்டார். அந்த வருடம் என்னால எங்கும் போக முடியல. அடுத்ததாக செக் குடியரசு நாட்டில் 13வது சர்வதேச உடல் ஊனமுற்றோருக்கான செஸ்அசோசியேஷன் போட்டியில் விளையாடிய 9 போட்டியில் மூன்றில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் மூன்றை டிராவும் செய்தேன். இதனால் 4.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றேன். அதன் காரணமாக ‘உமன் இன்டர்நேஷனல் மாஸ்டர்’ பட்டமும் கிடைச்சது.

இவ்வாண்டு ரூசம்பெர்க்கில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டிக்கு இந்திய அளவில் தேர்வானேன். பல்வேறு சுற்றுகளைக் கடந்து ஃபைனலில் ரஷ்ய வீராங்கனையுடன் போட்டியிட்டு தங்கம் வென்றேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் ஜெனிதா. ஆனால், வெளிநாடுகளுக்கு சென்று வர பணத்திற்குத் தான் கஷ்டமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் தந்தையான காணிக்கை இருதயராஜ். “நாங்கள் வெளிநாட்டு போட்டிக்குச் செல்லும்போதெல்லாம் என் பென்ஷன் புக் அடமானத்திற்கு சென்றுவிடும். அதை வைத்து கொஞ்சம் பணம் கிடைக்கும். மீதிப் பணத்தை நண்பர்கள் வழியாக புரட்டிருவேன். 2015ம் ஆண்டிலுருந்து தமிழக அரசும், இந்திய விளையாட்டுத் துறையும் நிதியுதவி அளித்துவருகிறது என்கிறார் காணிக்கை இருதயராஜ்.

‘போலியோ அட்டாக்’கால் தனது இரண்டு கால்கள் மற்றும் வலது கை பாதிக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி கொஞ்சமும் அவருக்குக் கவலையும் தாழ்வு மனபான்மையும் இல்லை என்கிறார் ஜெனிதா. “என் வாழ்க்கை இப்படி இருக்குதேன்னு ஃபீல் பண்ணுனதே கிடையாது சார். எப்பவும் நம்பிக்கையோடு இருக்கேன். விளையாடுறேன். ஜெயிக்கிறேன்” என உற்சாகத்துடன் கூறும் ஜெனிதா ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வரை பயிற்சி எடுக்கிறார். இவை தவிர செஸ் விளையாட்டு பற்றிய புத்தகங்கள் படித்து விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்கிறார். எப்படியெல்லாம் ‘மூவ்’ செய்து வெற்றி பெறலாம் என்பதை எழுத்தின் வழியே தெரிந்துகொண்டு போட்டிகளில் சதுரங்கக் காய்களை நகர்த்துகிறார் ஜெனிதா. இடதுகையால் அவர் நகர்த்தும் ஒவ்வொரு ‘மூவ்’வும் எதிராளிக்கு சிக்கலைத் தருபவை. இதுபோன்ற இடைவிடாத பயிற்சிகளின் மூலமே ஆறுமுறை தங்கம் வென்றது சாத்தியமாகியுள்ளது எனும் ஜெனிதா தன் வருங்கால லட்சியங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“அடுத்து ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம்தான் எனது இலக்கு. அதற்காகக் கடுமையா உழைச்சுட்டு இருக்கேன். மேலும் 2024ம் ஆண்டு நடக்கவிருக்கிற ஆசிய போட்டியில் தங்கம் வெல்லும் முயற்சியில் பயிற்சி மேற்கொண்டுவருகிறேன்’’ என திடமான தன்னம்பிக்கையோடு மன உறுதியோடு கூறுகிறார் ஜெனிதா.

– வெங்கட் குருசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here