இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்

இன்னும் பத்தே தினங்களில் நாட்டின் 62ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம்.

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திடம் இருந்து 1957, ஆகஸ்டு 31ஆம் தேதி நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் ஆகின்றன.

மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள் என்ற மூன்று பெரிய இனங்களின் பிரதிநிதிகள் தலைவர்கள் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத் திட்டனர்.

காடும் கழனியுமாக இருந்த நாட்டை வளமிக்க மலேசியாவாக உருவாக்கியதில் மூன்று இனத்தவர்களுக்கும் மிகமுக்கிய பங்குண்டு.

சாலைகள், தண்டவாளங்கள் நிர்மாணிப்பில் இந்தியர்கள் பங்கு – உழைப்பு அளப்பரியது. அவர்களின் தியாகங்களும் மரணங்களும் நாட்டின் வரலாற்றில் ஆழப்பதிந்திருக்கின்றன.

இதனை மறுதளிக்கவோ, மாற்றிச் சொல்லவோ இயலாத வகையில் வரலாற்று கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வானளாவிய வளர்ச்சியை எட்டுவதற்கு அன்று ரப்பர் தோட்டங்கள் ஈட்டித்தந்த வருமானம் மிகப் பெரிய பலமாக இருந்தது. அந்த ரப்பர் தோட்டங்களில் முதுகுத்தண்டு வளைந்து கூன் விழும் அளவுக்குப் பணி புரிந்தவர்கள் இந்தியர்கள்.

காலப்போக்கில் தோட்டங்கள் மறைந்தன. அதனையே நம்பி வாழ்ந்த தோட்டமக்களும் நாலா புறமும் சிதறிப்போயினர்.

இன்று மீண்டும் தோட்டங்கள் உருவெடுத்துள்ளன. ஆனால், இந்தியப் பாட்டாளிகள் காணாமல் போய்விட்டனர். அந்நியர் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டது.

இந்த மண்ணில் கால்பதித்த நாளில் இருந்து இதுதான் தன் தாய் நாடு என்ற உணர்வைத் தங்களின் உதிரத்திலும் உயிர்மூச்சிலும் கலந்துவிட்டவர்கள் இந்தியர்கள்.

இன்றளவும் அந்த உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது. இதனால்தான் நாட்டிற்கான நம்முடைய விசீவாங்ம், தேசப்பற்று கேள்விக்குறி யாக்கப்படும்போது நாம் பொங்கி எழுகிறோம்.

நம்முடைய விசுவாசமும் நாட்டுப்பற்றும் தாய்ப் பாலைப் போன்று தூய்மையானது. அதில் சந்தேகம் எனும் விஷத்தை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உலுக்கி எடுத்து விடுகிறோம்.

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாகிர் நாய்க் விஷயத்திலும் இதுதான் நடந்தது. நம்முடைய விசுவாங்மும் தேசப்பற்றும் சத்தியமிக்கது என்பது அவரின் விவகாரத்தில் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து நம்மை அடிக்கடி சோதித்துப் பார்க்கும் ஒரு விவகாரம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஆகும். இந்த ஒற்றுமை இந்த 62 ஆண்டுகளில் பலப்பட்டிருக்கிறதா?

ஆம் என்று சொல்ல முடியவில்லை. அதே சமயத்தில் இல்லை என்றும் சொல்ல முடிய வில்லை.

வலுப்பட்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த ஒற்றுமை பலம்தான் நாட்டை அபரிமிதமான வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. இந்தப் பலமே நாட்டின் வளமான வளர்ச்சியின் அஸ்திவாரம்.

ஆனால், இந்த அஸ்திவாரம் ஆட்டம் காணும் வகையில் அவ்வப்போது இனத்துவேஷங்கள் தலையெடுத்து உரசிப்பார்த்து விட்டுச் செல்லும்.

வாய்த்துடுக்குமிக்க அரசியல்வாதிகள், தீவிரவாத சமயவாதிகள் அவ்வப்போது ஆடிப் பார்க்கும் ஆட்டம்தான் இனத்துவேஷம். இருப்பினும் தூர நோக்கு – தெளிவான சிந்தனை கொண்ட தலைவர்களின் சாதுரியங்களால் அவை எழுந்த வேகத்தில் அணைக்கப்பட்டு விடும்.

சமூக வலைத்தளங்கள் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கி பிளவுபடுத்திப் பார்ப்பதில் ஆனந்தம் கொள்கின்றன.

எதிர்மறையான விவகாரங்களை எழுப்பி இனங்களுக்கிடையில் உணர்வுகளைக் கிளறிப்பார்ப்பதை ஒரு வேலையாகவே இவை இன்று பார்த்து வருகின்றன.

எதைப்பற்றியும் இவை கவலைப்படுவது இல்லை. சமயம், மொழி, இனம் என்று பல்வேறு வகையான எதிர்மறையான விவகாரங்களை வெளியிட்டு மகிழ்கின்றன.

இது ஒரு வகையான மனநோயா என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இந்தச் ங்மூக வலைத்தளங்களின் போக்கு மோங்மாகி உள்ளன.

ஏன் இப்படி நடக்கிறது என்பது அறவே புரிய வில்லை. ஒன்றைப் புரிந்து கொள்வதற்குள் அடுத்த ஒரு புதிய விவகாரத்தை எழுப்பி விடுகின்றன.

இவர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தண்டிப்பதற்கும் சட்டங்கள் இருந்தாலும் அதன் வீரியம் என்னவோ இன்னமும் மந்தமாகத்தான் இருக்கிறது.

சட்டம் என்ன செய்து விடும் என்று கேள்வி கேட்டு விட்டு துணிந்து செயல்படும் தைரியத்தை இந்தச் சமூக வலைத்தளங்கள் பெற்றிருக்கின்றன.

சகிப்புத்தன்மை இல்லாததும் மனநிறைவு இல்லாததும் இனங்களுக்கிடையில் அவ்வப்போது எழும் மனக்
கசப்புகளுக்குக் காரண மாக இருக்கின்றன.

பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் இது இயல்பானதுதான் என்றாலும் வளமான, ஆரோக்கியமான,
சுபிட்சமான, சுதந்திர மான வாழ்க்கைக்கு இந்த எதிர்மறையான போக்கு எந்த வகையிலும் உதவாது.

நம்முடைய ஒற்றுமையை உலக நாடுகளே பாராட்டுகின்றன. இந்தப் பெருமையைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்றால் மன ஒற்றுமை பலப்பட வேண்டும்.

மனக்குறைகளைக் கொட்டும்போது நிதானம் தவறிடக் கூடாது. நாட்டின் அமைதியையும் சுபிட்சத்தையும் கெடுக்கும் அளவில் இருக்கவும் கூடாது.

சமயம், கலாச்சாரம் , இனம், சமய நம்பிக்கைகள் என்று வரும்போது அதனை மதிக்கும் பண்பாடு பலப்பட வேண்டும். சகிப்புத்தன்மை ஓங்க வேண்டும். இதன்வழி மலேசியர்களிடையிலான ஒற்றுமை வலுப்பட வேண்டும்.

மற்றவர்களைச் சினப்படுத்தும் விவகாரத்தைக் கையில் எடுப்பதை முற்றாகத் தவிர்ப்போம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ருக்குன் நெகாரா கோட்பாடுகளின் உண்மையான தாத்பரியங்களை உணர்ந்து நடக்க வேண்டும். நாட்டின் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தைப் போற்றி மதிக்க வேண்டும்.

தேசிய ஒற்றுமையை அசைத்துப் பார்க்கும் தீயச் சக்திகளைத் தகர்த்தெறிந்து நாட்டின் மாண்பைத் தற்காத்து மலேசியர்களாக வாழ்வோம். நாட்டின் சுதந்திரத்தை உயிர் மூச்சாக மதிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here