தொட்டதை துலங்கச் செய்வார் பட்டவன்

பவித்திரம், நாமக்கல்

திருச்சி மாவட்டம் துறையூர் ஜமீன் பண்ணை வீட்டில் நல்லையன் என்பவர் வேலை செய்து வந்தார். ஒரு நாள் துறையூர் ஜமீன் எல்கைக்கு உட்பட்ட தம்மம்பட்டியில் வேங்கை ஒன்று அட்டகாசம் செய்வதாக அப்பகுதியினர் ஜமீனிடம் கூறினர். ஜமீன், உடனே பண்ணை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நல்லையனை அழைத்தார். விபரத்தினை தெரிவித்து தம்மம்பட்டிக்கு செல்லுமாறு கூறினார். அதன்பேரில் வேங்கையை கொல்ல தம்மம்பட்டிக்கு புறப்பட்டார். புறப்படும் முன் வீட்டிற்கு சென்று தனது காதல் மனைவி வீரம்மாளிடம் விபரத்தை கூறிவிட்டு தம்மம்பட்டி புறப்பட்டார் நல்லையன்.

கொல்லிமலைச் சாரலில் உள்ள வனத்தில் கூடாரம் அமைந்து அங்கேயே தங்கியிருந்து வேங்கை வருவதை நோட்டமிட்டார் நல்லையன். நல்லையன் அமைத்த கூடாரத்தின் அருகில் உப்பிலிய நாய்க்கர் செங்கல் சூளை நடத்தி வந்தார். அங்கு செங்கல் அறுக்கும் தொழில் செய்து வந்த உப்பிலியர் சமூகத்தைச் சேர்ந்த சின்னம்மாள் என்பவளை நல்லையன் விரும்பினார். தினமும் காலையும், மாலையும் சின்னம்மாளுடன் நல்லையன் உறவாடினார். அவர்களின் நெருக்கம் அதிகமானது. நல்லையன் வேங்கையைக் கண்டுபிடித்து வெட்டி வீழ்த்தினார். வேங்கையின் தலை முட்புதருக்குள் விழுந்தது.

குதிரையில் இருந்தபடியே முட்புதருக்குள் கிடந்த வேங்கையின் தலையைக் காலால் எற்றி எடுக்க முனைந்தபோது முட்புதருக்குள் இருந்த பாம்பு நல்லையன் தீண்டிவிட்டது. அவ்விடத்திலிருந்து மீண்டு வந்த நல்லையன் உப்பிலியர் வீட்டிற்கு வந்து விடம் முறிக்கச் சொன்னார். சின்னம்மாளை மனைவியாக்கிக் கொண்டதால் உண்டான வஞ்சம் காரணமாகச் சரியாக விடம் முறிக்கவில்லை. அங்கிருந்து புறப்பட்டு வரும்போது ஆச்சா மரத்தடியில் மயக்கமுற்று விழுந்து இறந்தார். நல்லையன் வீரம்மாளின் கனவில் தான் இறந்துபோனதைத் தெரிவித்தார்.

இறந்த இடத்தில் கருடன் சுற்றிக் கொ்ண்டிருக்கும் என்று கனவில் கூறினார். கணவனைத் தேடிச்சென்ற வீரம்மாள் கருடன் சுற்றுவதை கண்டு நல்லையன் இறந்த இடத்தை அறிந்தாள். உறவினர்கள் ஒன்று திரண்டு வந்து நல்லையன் இறந்த இடத்திலேயே தீ மூட்டி எரித்தனர். வீரம்மாளும், சின்னம்மாளும் நல்லையனின் சிதையில் புகுந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். இம்மூவருக்கும் அவ்விடத்திலேயே புடைப்புச் சிற்பமாக ஒரே கல்லில் உருவம் பொறித்து நடுகல் எடுத்துள்ளனர்.

ஊரின் பொது நன்மைக்காக வேங்கையைக் கொன்று பின்னர் இறந்தமையால் நல்லையனைத் தம்மம்பட்டி ஊர்ப்பிடாரி கோயிலில் பட்டவனாக வழிபடுகின்றனர். அந்நடுகல் உள்ள இடம் ‘தோரண ஆச்சான் கோயில்’ என்றும் ‘நாச்சாரம்மா கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. பவித்திரம் கம்பராயன் கோயிலிலுள்ள நல்லையன், வீரம்மாள், சின்னம்மாள் முதலிய தெய்வங்களுக்குச் சிலை ஏதும் இல்லை. இவர்களுக்கான தெய்வப்படிமங்களை உருவாக்க புதுவேட்டி வாங்குகின்றனர். வேட்டியை முறுக்கி முடிச்சிட்டு மனித வடிவத்தை உருவாக்குகின்றனர். நல்லையன், சின்னம்மாள் படிமத்திற்கு வீட்டுக்கோயிலில் இரண்டு கிடா பொதுவில் வெட்டுகின்றனர்.

வீரம்மாளுக்கு சூலாடு அறுத்து சுடுவாங்கறி வைத்துப் படைக்கின்றனர். பெரும்பூசை முடிந்ததும் வேட்டியிலுள்ள முடிச்சினை அவிழ்த்து தெய்வ உருவத்தை விடுகின்றனர். தெய்வத்தை எழுந்தருளச் செய்து வேட்டியைத் தங்கள் வயதான பங்காளிகளுக்குக் கட்டிக்கொள்ளத் தருகின்றனர். கம்பராயன் கோயிலில் கரகம் பாலிப்பது இருமுறை நடக்கிறது. கம்பராயனுக்கு ஒருமுறை கரகம் பாலித்து காட்டுக்கோயிலில் கிடா வெட்டி பாலித்து எரிகாவம் கொடுக்கின்றனர். மறுநாள் பட்டவனுக்குக் கரகம் பாலித்து கிடாவெட்டி சூலாடு அறுத்து சமைத்துப் படைக்கின்றனர். அடுத்ததாக பழையபாளையம் சென்று அங்காயி கோயிலில் கிடா, கோழி, பன்றி என முப்பூசை கொடுக்கின்றனர்.

இவையாயும் குடிபெயர்ந்து வருபவர்கள் எவ்வாறு தங்களது முன்னோர் வழிபட்ட கடவுளையும், தங்கள் குலப்பட்டவனையும் தனித்தனியே பல கட்டங்களாக இணைத்துக் கொண்டு வழிபடுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன. பாப்பாத்தியைத் தங்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டாலும் அதற்கு சைவப் பூசையே படைக்கின்றனர்.கம்பராயன் கோயிலில் பட்டவன் என்கிற நல்லையன், வீரம்மாள், சின்னம்மாள், பாட்டன், பாட்டி,  காத்தவராயன், மதுரைவீரன், பாப்பாத்தி முதலான தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன.

நாமக்கல் மாவட்டம் பவித்திரம் என்ற ஊரில் கம்பராயன் தெய்வமாகவணங்கப்படுகிறார். இக்கோயிலில் பட்டவன் அருள் பாலிக்கிறார்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், புதுப்பட்டியிலிருந்து பவித்திரத்திற்குக் குடியேறிய மூவர் தம்மூரிலிருந்து குடிமண்ணைக் கொண்டுவந்து வைத்து இக்கோயிலை உருவாக்கினர். இவர்கள் பவித்திரத்தில் குடியேறி நான்கு தலைமுறைகள் ஆகின்றன. இப்போது அறுபது தலைக்கட்டாக உயர்ந்துள்ளது. கம்பராயன் கோயிலில் கம்பராயனுக்கு அடுத்து வணங்கப்படுவது பட்டவன் என்ற நல்லையன். கோயில் கோபுர வாசலில் குதிரை மேல் நின்ற நீல வண்ணத்தில் கம்ராயனும், மற்றொரு பக்கம் குதிரை மேல் அமர்ந்த படி பட்டவனும் சுதை சிற்பமாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here