தொழில் புரட்சி 4.0 சவால்களை எதிர்கொள்ளும் உன்னத கல்வித் திட்டம் TVET

2030ஆம் ஆண்டுக்குள் ஆக்கத்திறன் – ஆற்றல்மிக்க ஆள்பலத்தை மலேசியா கொண்டிருக்க வேண்டும். தொழில் புரட்சி 4.0 போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் மலேசியாவைப் பீடுநடை போட வைக்க வேண்டும் என்பதுதான் திவெட் (TVET) எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி பயிற்சித் திட்டத்தின் தூரநோக்கு இலக்கு ஆகும்.

பொது கல்வியோடு தொழில் பயிற்சிக் கல்வியை இணைத்து மலேசியர்களது பொருளாதார வலிமையைப் பலப்படுத்துவதுதான் இக்கல்வித் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். தொழில்நுட்பம், அறிவியல் புத்தாக்கம் சார்ந்த அறிவாற்றலையும் ஆக்கத்திறனையும் பெறுவதோடு பல்வேறு தொழில் துறைகளில் ஆக்கத் திறன்களை முழு வீச்சில் பயன்படுத்தி தொழில் புரட்சி 4.0 சவால்களை சமாளிப்பதற்குரிய மனித ஆற்றலை உருவாக்கும் உன்னத நோக்கத்தை திவெட் கொண்டிருக்கிறது.
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் கோரிக்கையை ஏற்று தேசியத் திட்டங்களில் திவெட் முன்னிலை பெற்றிருக்கிறது. திவெட் முக்கியத்துவம் அறிந்து அரசாங்கம் அதில் அதீத அக்கறை கொண்டு அதன் வெற்றிக்கு முழு வீச்சில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

உயர் திறன்மிக்க உள்நாட்டு ஆள்பலத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் திவெட் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கிறது. திவெட் வழி நாட்டின் ஏழ்மை நிலையை பெருமளவில் குறைக்க முடியும். மக்களின் சௌகரியமான வாழ்வாதாரத்திற்குரிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தையும் இது கொண்டிருக்கிறது. திவெட் திறன் பெற்றிருப்பவர்கள் உயர் சம்பளம் பெறுவது உலகம் முழுமையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பட்டப்படிப்பை முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள்கூட இன்று திவெட் தொழில் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

திவெட் அமைச்சரவைக் குழு

கல்வி அமைச்சர் டாக்டர் மங்ஸ்லீ மாலிக் கோரிக்கையை ஏற்று 2019, ஆகஸ்டு 14ஆம் தேதி நடைபெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் திவெட் சிறப்புக் குழு அமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்குழுவுக்கு கல்வி அமைச்சர் தலைமையேற்றுள்ளார். இதன் உறுப்பினர்களாக மனிதவள அமைச்சர், புறநகர் மேம்பாட்டு அமைச்சர், இளைஞர் – விளையாட்டுத்துறை அமைச்சர், தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர், உள்நாட்டு வாணிபம் – பயனீட்டாளர் நலத் துறை அமைச்சர், விவசாயம் – விவசாயம் சார்ந்த அமைச்சர், பொதுப்பணி அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இச்செயற்குழுவின் முதல் கூட்டம் 2019, ஆகஸ்டு 22ஆம் தேதி நடைபெற்றது. அதில் ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் –

* நாட்டின் திவெட் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் தொழில் திறன்மிக்க ஆள்பலத்தை உருவாக்குவது.
* நாட்டின் பொருளாதார வலிமைக்கு உத்வேகம் தருவதற்கு தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான தொழில் திறன் – ஆக்கம் மிக்க ஆள்பலத்தின் ஆளுமையை வலுப்படுத்துவது.
* தேசிய திவெட் ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது, நிதி ஒதுக்கீடு, கூட்டு உரிமையைக் கொண்டிருப்பது, ஒரே பெயரில் திவெட் சான்றிதழ்.
* தேசிய திவெட் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் இயக்கங்கள் – பிரச்சா ரங்கள் மேற்கொள்ளப்படுதல்.
* மதிப்புமிக்க தொழில்துறை பங்காளிகளை (TVET VIP) கொண்டிருப்பது. நாட்டின் தேசிய திவெட் திட்டம் வெற்றி பெறுவதற்கு ஈடுபாடு, ஒத்துழைப்பு, ஆதரவு நல்கும் தொழில் நிறுவனங்களைப் பெற்றிருப்பது. இதன் மூலம் தொழில்நுட்ப – தொழிற்கல்வித் திட்டங்களின் ஆளுமையை வலுப்படுத்துதல்.

தொழில்புரட்சி 4.0 சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மலேசியர்களையும் தயார்ப்படுத்தும் ஆளுமையையும் திவெட் மலேசியா முன்னெடுத்திருக்கிறது.

வெ. 590 கோடி ஒதுக்கீடு

திவெட் திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கு 2020 பட்ஜெட்டில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் 590 கோடி வெள்ளியை ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. திவெட் வெற்றிக்குரிய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். 2013 – 2025 மலேசியக் கல்வி பெருந்திட்டத்தின் 2018 ஆண்டறிக்கையில் இது உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. திவெட் பட்டதாரிகள் வேலையில் அமர்த்தப்படும் எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ குறிப்பிட்டுள்ளார். 2017இல் 12,083 பேரும் 2018இல் 13,740 பேரும் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்.

மாணவர்களின் தொழில் பாதையில் திவெட் முதன்மை பெற்றிருப்பதற்குரிய திட்டங்களை அறிமுகம் செய்வதில் கல்வி அமைச்சு அதீத அக்கறை கொண்டுள்ளது.
அவற்றில் தொழில்துறை தேவைகள், அப்பரென்டிஸ் பயிற்சிகள், நிபுணத்துவச் சான்றிதழ், தொழில் முனைவர், கம்யூனிட்டி காலேஜ் சான்றிதழ் போன்றவையும் அடங்கும். ஏட்டுக்கல்வியோடு தொழிற்கல்வியின் அவசியத்தையும் கல்வி அமைச்சு தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு ஆக்கப்பூர்வமாகவும் செயல்படுத்தியும் வருகிறது.

எதிர்கொள்ளும் சவால்கள்

திவெட் திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதை டாக்டர் மஸ்லீ சீட்டிக்காட்டினார்.
கலாச்சாரம், கண்காணிப்பு, நடைமுறைப்படுத்துதல், மாணவர்களின் பிடிவாதம் போன்றவை இதில் அடக்கம். ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து திவெட் தொழில்பயிற்சி மீதான ஈடுபாட்டில் அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதை கல்வி அமைச்சின் திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதில் கல்வி அமைச்சின் விவேகப் பங்காளிகளாக இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அதீதமானது என்பதையும் டாக்டர் மஸ்லீ சீட்டிக்காட்டியிருக்கிறார்.

ரோபோட்டிக் உபரிப்பாகங்கள்

தொழில் புரட்சி 4.0இல் ரோபோட்டிக் ஆதிக்கம் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த ரோபோட்டிக் தயாரிப்பில் சில முக்கிய உபரிப் பாகங்களை மலேசியாவில் தயாரிப்பதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ரோபோட்டின் கை-கால் முட்டிகள் தயாரிக்கும் திட்டம் பெரும் சம்பாத்தியத்தைக் குவிக்கக்கூடியதாகும்.
அதே சமயத்தில் ஆள் இல்லா டுரோன் (DRONE) தயாரிப்பிலும் மலேசியா ஆர்வம் காட்டி வருகின்றது.

திவெட் கல்வி மூலம் இந்தப் புத்தாக்க ஆற்றலை மலேசியர்கள் பெற முடியும்.
‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்’ என்று அன்று பாடி வைத்தது இன்று உண்மையாகி வருகிறது. திவெட் கல்வி ஒரு மனிதனின் வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் சக்தியாக உருபெற்று வருவதையும் மறப்பதற்கு இல்லை.

திவெட் இக்கோ சிஸ்டம்

திவெட் இக்கோ சிஸ்டம் புத்தாக்கத்தில் (TVET INOVATION ECOSYSTEM) என்பது தொழில்துறை அமைப்பு வலையில் இடம்பெற்றுள்ளது. இத்திட்டத்தில் கல்வி அமைச்சால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள், போலிடெக்னிக் கல்லூரிகள், கம்யூனிட்டி கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. தங்களது பாடத் திட்டத்தில் மாணவர்களுக்கு திவெட் கல்வித் திட்டத்தையும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அறிமுகம் செய்து வருகின்றன. 4 போலி டெக்னிக் கல்லூரிகள் திவெட் வெற்றிக்கு இதுவரை பெரும் பங்காற்றி வருகின்றன. போலிடெக்னிக் உங்கு அஸிஸ் (PUO), போலிடெக்னிக் சுல்தான் சலாஹுடின் அப்துல் அஸிஸ் ஷா (PSA), போலிடெக்னிக் இப்ராஹிம் சுல்தான் (PIS), போலிடெக்னிக் சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா (POLIMAS) ஆகியவை திவெட் அப்பரென்டிஸ் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதே சமயத்தில் நாடு முழமையிலும் உள்ள போலிடெக்னிக் கல்லூரிகளையும் கம்யூனிட்டி கல்லூரிகளையும் அனைத்துலக மயமாக்கும் பல்வேறு திட்டங்களையும் கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

தென் கிழக்கு ஆசியா திவெட் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் 4ஆவது கட்டத்தில் போலிடெக்னிக் கல்லூரிகள், கம்யூனிட்டி கல்லூரிகள் பங்கேற்றன.
இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகள் இதில் பங்குபெற்றன. இதில் பங்கேற்ற பல்வேறு நிறுவனங்கள் மலேசியாவுடன் ஒத்துழைப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. மாணவர்களுக்கும் மக்களுக்கும் பெரும் நன்மைகளைக் கொண்டு வரும் இத்திட்டங்களை அமல்படுத்துவதில் கல்வி அமைச்சின் முன்னெடுப்புகள் வெற்றி பெற்றுள்ளன. தொழில்நுட்பத்தில் புதிய சிந்தனைகளையும் ஆக்கத்தையும் மலேசிய மாணவர்கள் பெற்றுள்ளது அவர்களின் அடைவு நிலையில் பிரதிபலித்துள்ளது.

உலக நாடுகள் ஆர்வம்

திவெட் துறையில் கைகோத்து பல்வேறு துறைகளில் ஈடுபாடும் ஒத்துழைப்பும் வழங்கும் நோக்கத்தில் திவெட் செயற்குழுவுடன் சீனா, கனடா, பூட்டான், பிரிட்டன், ஜப்பான் நாடுகளின் பேராளர்கள் சந்திப்பு நடத்தி உள்ளனர். மலேசியாவின் திவெட் திட்டங்களால் ஈர்க்கப்பட்டிருக்கும் பல உலக நாடுகள் அவர்களின் நிபுணத்துவத்தையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்வதற்கு முன்வந்த வண்ணம் உள்ளன.

உற்பத்தி ஆற்றலைப் பெருக்கி ஏழ்மையைத் துடைத்தொழிக்கும் கல்வி அமைச்சின் திவெட் திட்டங்களுக்கு உலகப் பார்வை கிட்டியிருப்பது இக்கல்வித் திட்டத்தின் உன்னதம் பளிச்சிடுகிறது.

திவெட் கல்வித் திட்டம் சமூக மேம்பாடு, பொருளாதாரம், வாழ்க்கை நிலையை உயர்த்திடுவதற்கு ஒளி விளக்காகவும் விளங்குகிறது.

பி40 தரப்பினருக்கு வரப்பிரசாதம்

திவெட் கல்வித் திட்டம் உயர்கல்வியைத் தொடர முடியாத – பிடி3, எஸ்பிஎம் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெறத் தவறிய பி40 பிரிவு (குறைந்த வருமானம்) பிள்ளைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது.
இப்பிரிவினரின் வாழ்க்கையில் ஒரு விடிவெள்ளியாக திவெட் விளங்குகிறது. அவர்களைப் பின்னிப் பிணைந்திருக்கும் ஏழ்மையை விரட்டி அடிக்கும் ஒரு வலுவான ஆயுதமாகவும் திவெட் பிறப்பெடுத்திருக்கிறது.

நாட்டின் மேம்பட்டில் மிகப்பெரிய ஓர் உந்துசக்தியாக திவெட் உருமாற்றம் பெற்று வருகிறது. தொழில்புரட்சி 4.0 சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் வலிமையையும் திவெட் பெற்றுள்ளது. திவெட் படிப்பை முடித்தவர்கள் தொழில் துறைகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உடனுக்குடன் வேலையில் அமர்த்தப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், கல்வி அமைச்சின் வழி திவெட் திட்டத்தை அமல்படுத்தி மக்களின் வாழ்க்கையில் உண்மையான உருமாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here