நியூசிலாந்து எரிமலை குமுறல்

வெல்லிங்டன் –

நியூசிலாந்தின் பிரபல சுற்றுப் பயணத் தலமான வைட் ஐலண்டு தீவில் உள்ள எரிமலை ஒன்று திடீரென்று நேற்று குமுறியது. அச்சம்பவத்தில் ஐவர் உயிரிந்ததோடு பலர் காயமுற்றுள்ளனர். மேலும் பலர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எரிமலை குமுறுவதற்கு முன்பு அதன் வாய்ப் பகுதியின் விளிம்புக்குள் சுற்றுப்பயணிகள் சிலர் நடந்து கொண்டிருப்பது தென்பட்டது.

எரிமலை திடீரென்று குமுறத் தொடங்கியவுடன் அங்கிருந்து இருபத்து மூன்று பேர் மீட்கப்பட்டனர். மேலும் சிலர் அங்கு சிக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.

அந்த எரிமலையின் பெயரும் வைட் ஐலண்டு ஆகும். நோர்த் ஐலண்டு தீவின் கரையோரத்திலிருந்து நாற்பத்தெட்டு கிலோமீட்டர் தொலைவில் அந்த எரிமலை உள்ளது. உயிர்துடிப்புடைய எரிமலைகளுள் அதுவும் ஒன்றாகும். எரிமலையிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய புகை அப்பகுதியின் வான்வெளி முழுவதும் பரவியுள்ளது. திங்கட்கிழமை பிற்பகல் 2.11 மணிக்கு அது குமுறியது.

அவ்வேளையில், எரிமலை அமைந்திருக்கும் வைட் ஐலண்டு தீவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்களுள் சிலர் அங்கிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இதர நபர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த எரிமலைக்கு அருகே விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here