கோலாலம்பூர் –
சர்ச்சைக்குரிய ஜாவி எழுத்து அறிமுகத் திட்டம் தொடர்பாக சீனக் கல்விமான்கள் இயக்கத்தினருடன் கலந்துரையாடல் நடத்த கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் முன்வர வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப் பட்டிருக்கிறது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் தாய்மொழிப் பள்ளிகளில் 4ஆம் வகுப்பில் ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் அமலுக்கு வரும் என்று கல்வி அமைச்சரகம் அறிவித்துள்ளது. இதை எதிர்த்து வரும் டிசம்பர் 28, 29ஆம் தேதிகளில் இரண்டு மாநாடுகள் நடத்தப்படவுள்ளன.
இது ஒரு குறிப்பிட்ட இனப் பிரச்சினை அல்ல. இது தேசியப் பிரச்சினை என்று டோங் ஜியாவ் ஸோங் எனப்படும் சீனக் கல்விமான்கள் அமைப்பு கூறுகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சீனக் கல்விமான்களுடன் கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் கலந்துரையாடல் நடத்த வேண்டுமென்று கோலாலம்பூர் – சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டப சங்கத்தின் மனித உரிமைக் குழுவின் தலைவர் லியாவ் கோக் ஃபா கேட்டுக் கொண்டார்.
இதுபோன்ற சந்திப்பின் வழி இந்தப் பிரச்சினைக்குச் சுமுகமான முறையில் தீர்வு காண முடியும். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுக்கும் தீர்வு காண முடியும்.
இந்த விவகாரத்தில் அவசரம் காட்டக்கூடாது என்று கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அறிவுரை கூறியிருக்கிறார். எனவே, இதனையெல்லாம் மஸ்லீ மாலிக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று லியாவ் வலியுறுத்தினார்.