மலேசிய மடானி அரசாங்கம் மை காசே திட்டத்தின் கீழ் மை கார்டு வழி வழங்கியுள்ள 100 ரிங்கிட் சாரா உதவித்தொகை பாமர மக்களின் சுமையை ஓரளவு குறைத்துள்ளதாக மக்கள் ஓசை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த சாரா (Sumbangan Asas Rahmah – SARA ) உதவித் திட்டத்தில் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. 100 ரிங்கிட் என்பது சிறிய தொகையாக இருந்தாலும் அது சாதாரண மக்களுக்கு பெரும் உதவியாக அமைவதாக பலர் நமது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
மை கார்டில் மாதந்தோறும் சேர்க்கப்படும் இந்த 100 ரிங்கிட் அவர்களின் சுமையை சற்று குறைக்க பெரும் உதவியாக அமைவதாக ஜாலான் காப்பார் 5ஆவது மைலில் வசிக்கும் முன்னாள் தீயணைப்பு வீரர் வேணுகோபால் தெரிவித்தார்.
இந்த சாரா உதவித் தொகை தங்களுக்கு பெரும் உதவியாக இருப்பதாகவும் சமையல் சார்ந்த தேவைகளுக்கு உதவியதுடன் வறுமைக் கோட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு இது பெரும் பக்கபலமாக அமைவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக ஏழைகளுக்கு உகந்த நேரத்தில் கிடைத்த தகுந்த உதவி எனத் தாராளமாகக் கூறலாம் எனக் குறிப்பிட்டார்.
மடானி அரசாங்கம் மாதந்தோறும் வழங்கும் இந்த உதவிநிதி விலைவாசி ஏற்றம் கண்டுள்ள இந்தக் காலகட்டத்தில் பெரிதும் துணைபுரிவதாக காப்பாரைச் சேர்ந்த ஆர்.ராஜாமணி, சு.வீரக்குமார், பொ.சதீஷன் ஆகியோர் தெரிவித்தனர்.
100 ரிங்கிட் என்பது சிறிய தொகையாக இருந்தாலும்கூட அது எத்தகைய உதவியாக இருக்கிறது என்பது ஏழை மக்களுக்குத்தான் தெரியும்; புரியும். மக்களின் சுமையை அறிந்து தக்க நேரத்தில் இந்த உதவியை வழங்கியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றி கூறிக்கொள்வதுடன் அரசாங்கத்தின்வழி பல திட்டங்கள் மக்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

மாதந்தோறும் மை கார்டில் சேர்க்கப்படும் இந்த 100 ரிங்கிட் உதவித்தொகை தேவையான பொருட்களை வாங்குவதை எளிதாக்குகிறது.
தீபாவளி நெருங்கி வரும்போது இந்துக்கள் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள இந்த சாரா உதவித் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என பந்திங் தாமான் கெமுனிங்கைச் சேர்ந்த வெள்ளிகண்ணன், இந்திராணி குடும்பத்தினர் தெரிவித்தனர். பெருநாளுக்குத் தேவையான பலகாரப் பொருட்கள், சமையல் எண்ணெய், நெய், சமையலுக்குத் தேவையான கறி பவுடர் போன்ற பொருட்களை இந்த சாரா உதவித்திட்டத்தின் வழியே வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறினர்.

அன்றாட சமையலுக்குத்தேவையான பொருட்களைக்கூட வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்போர் பலர் நம்மிடையே இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த உதவிநிதி ஓர் அட்சயப் பாத்திரமாக இருப்பதாக பா.இளங்கோவன், பா.பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். நினைத்த நேரத்தில் எதனையும் வாங்க முடியாத சூழலில் வாழ்ந்து கொண்டிருப்போர் இன்றைக்கு என்ன சமைப்பது என்ற கேள்விக்குறியோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தக்க தருணத்தில் அரசாங்கம் கொடுத்துள்ள இந்த உதவி அவர்களின் இருண்ட வாழ்க்கைக்கு சற்று ஆறுதலாக அமைவதாகக் குறிப்பிட்டனர்.

மை கார்டு வழி அரசாங்கம் வழங்கும் இந்த சாரா உதவித் திட்டம் இவ்வாண்டுக்கான தீபாவளிப் பரிசாகவே தாங்கள் கருதுவதாக சிரம்பானைச் சேர்ந்த குணசுந்தரி தெரிவித்தார். இவ்வாண்டு தீபாவளிக்கு இந்த உதவித்தொகையைக் கொண்டே சமையல், பலகாரப் பொருட்கள் போன்றவற்றை வாங்கப் போவதாகவும் அநாவசிய செலவுகளைக் குறைத்துக் கொண்டு இதுபோன்ற உதவித்தொகைகளின் வழி பொருட்களை வாங்கி குடும்பத்தைச் சிக்கனமாகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கு வழி வகுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில் இந்த சாரா உதவித் திட்டம் பாமர மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் ஓர் அட்சயப் பாத்திரமாக மலேசிய மக்களுக்கு கிடைத்திருப்பது அவர்களின் மகிழ்ச்சி பொங்கும் வார்த்தைகளில் இருந்தே நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. 100 ரிங்கிட் சாரா உதவித் திட்டம் ஏழைகளின் புன்னகைத் திட்டம் என துணிந்து கூறலாம்.




















