15வது ஆண்டு சுனாமி தாக்கியதன் நினைவு நாள்: கடலில் பால் ஊற்றி அஞ்சலி

நாகை: தமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய சுனாமி தாக்கி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

இறந்தவர்களின் நினைவாக மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகையில் மட்டும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் சுனாமியில் சிக்கி உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் காலையில் இருந்தே பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் நினைவாக மலர்வளையம் வைக்கப்பட்டு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து கீச்சாங்குப்பம் பகுதி மீனவர்கள் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படாமலும் மீனவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் வந்துவிட கூடாது என்கிற நோக்கத்தை முன்னிறுத்தி காலையில் இருந்து பூஜைகள் நடத்தப்பட்டன. சுனாமியில் உயிழந்தவர்களின் குடும்பத்தினர் கடலில் பால் ஊற்றி பூஜைகள் செய்து வருகின்றனர்.

இந்த சுனாமி பேரலையால் கன்னியாகுமரியில் 33 மீனவ கிராமங்கள்  முழுமையாக அழிந்து நாசமானது. இந்த ஆழி பேரலை காரணமாக இந்த மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சோக வடுக்கள் 15 ஆண்டுகள் ஆகியும் மீனவர்களின் நெஞ்சில் அகலாத நிலையே உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி தாக்கி 15ஆண்டுகள் ஆனதை ஒட்டி மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 42 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இந்த துயர நிகழ்ச்சியில் நனைந்த வண்ணம் இருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் சுமார் 610 பேர் இந்த சுனாமியினால் உயிரிழந்தனர். உயிரிழப்பு, பொருட்சேதம் என அதிக பாதிப்பு கடலூர் மாவட்டத்தில் இருந்து வந்தது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 610 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர். 58 குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதை ஆகியுள்ளனர். தங்கள் கண் முன்னே தங்கள் உறவினர்களை கொடூர அலைகள் இழுத்து சென்றதை பார்த்து இவர்கள் கண்ணீருடன் சோக நிகழ்வுகளை தெரிவிக்கின்றனர். இந்த பகுதி மீனவர்கள் அமைதி ஊர்வலமாக கடற்கரை பகுதிக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி இந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here