கோலாலம்பூர் –
தன் தந்தை துன் சாமிவேலுவின் மனநலம் குறித்து தீர்மானிக்க மருத்துவ விசாரணை நடத்தக் கோரி டத்தோஸ்ரீ எஸ். வேள்பாரி தாக்கல் செய்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று சாமிவேலுவின் மனைவி எனக் கூறிக் கொண்ட இ. மிரியாம் ரோஸ்லின் செய்துகொண்ட மனு மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 18ஆம் தேதிக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிர்ணயித்தது.
வேள்பாரி தாக்கல் செய்துள்ள வழக்கில் ரோஸ்லினையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ள முடியுமா என்பதைத் தீர்மானிக்க உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் சோஃபியான் அப்துல் ரசாக் இந்த மனுவை விசாரிப்பார் என்று ரோஸ்லின் வழக்கறிஞர் ரமேஷ் சிவகுமார் தெரிவித்தார்.
சட்டரீதியாகத் தனக்கு முகாந்திரம் இருக்கிறது எனும் அடிப்படையில் ரோஸ்லின் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக அவர் நீதிமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் தெரிவித்தார்.
வேள்பாரி வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கோரி கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ரோஸ்லின் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சாமிவேலுவின் மனநலம் குறித்து தீர்மானிக்க மனநலச் சுகாதாரச் சட்டத்தின் பிரிவு 52இன் கீழ் மருத்துவ விசாரணை நடத்தக்கோரி வேள்பாரி கடந்த மாதம் வழக்கு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
ஈராண்டுகளுக்கு முன்பு நரம்புத் தளர்ச்சி நோய் காரணமாக சாமிவேலு சுயநினைவை இழந்திருப்பதாகவும் அவருக்கெதிராகத் தொடுக்கப்பட்டுள்ள இரண்டு வழக்குகளில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்றும் அந்த வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துன் சாமிவேலுவின் குடும்பத்தில் தன்னையும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கக்கோரி சாமிவேலு மற்றும் வேள்பாரிக்கு எதிராக ரோஸ்லின் கடந்த ஆகஸ்டு மாதம் ஈப்போ உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். வேள்பாரி உட்பட அவரின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்காமல் சாமிவேலுவை நான் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டுமெனவும் ரோஸ்லின் அந்த மனுவில் கோரியுள்ளார்.
2017ஆம் ஆண்டு முதல் சாமிவேலுவின் நிதியை வேள்பாரி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். 1981ஆம் ஆண்டு முதல் நானும் முன்னாள் அமைச்சரும் மஇகா முன்னாள் தேசியத் தலைவருமான சாமிவேலுவும் கணவன் – மனைவியாக வாழ்ந்திருப்பதாகவும் 59 வயதான ரோஸ்லின் கூறியிருக்கிறார்.
இதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஜூலை தொடங்கி தமக்கு வரவேண்டிய 191,107.35 வெள்ளியை சாமிவேலுவும் வேள்பாரியும் வழங்க வேண்டுமெனவும் அவர் மனுவில் கூறியிருக்கிறார்.
அதோடு ஆயுட்கால ஜீவனாம்சத் தொகையாக 2 கோடி வெள்ளியையும் மாதாந்திர செலவுத் தொகையாக 25 ஆயிரம் வெள்ளியையும் வழங்க வேண்டுமென ரோஸ்லின் தமது வழக்கு மனுவில் கேட்டிருக்கிறார்.