7 தமிழ்ப்பள்ளிகளில் இலவச சிற்றுண்டி

ஆயர் தாவார் –

நாடு தழுவிய அளவில் 100 பள்ளிக்கூடங்களில் பரீட்சார்த்த அடிப்படையில் இலவசக் காலை சிற்றுண்டித் திட்டம் சத்துணவு விரிவாக்கத் திட்டமாகத் தொடங்கியிருக்கிறது.

இதற்குத் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் 7 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும். பேராக் மாநிலத்தில் மஞ்சோங் மாவட்டத்தில் செயல்படும் ஆயர் தாவார், தமிழ்ப்பள்ளியில் இலவச சத்துணவுத் திட்டம் தொடங்கியது.

நெகிரி செம்பிலானில் ரொம்பின் கு. பத்பநாபன் தமிழ்ப்பள்ளியிலும் ரெம்பாவ், பத்து அம்பார் தமிழ்ப்பள்ளியிலும் இலவசக் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் உற்சாகத்துடன் இலவசக் காலைச் சிற்றுண்டியை உண்டு மகிழ்ந்தனர். பெற்றோரும் மனநிறைவு தெரிவித்துள்ளனர்.

இப்பள்ளியில் பயிலும் 400 மாணவர்களுள் 215 மாணவர்களுக்கு இலவசக் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. நேற்று மீ பிரட்டல், பொறித்த கோழித்துண்டு, பால், அரை ஆப்பிள் பழம் வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் நாசி லெமாக், கோழி பிரட்டல், மைலோ, குமுட்டிப் பழம் வழங்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு நாளும் மாறுபட்ட சீரான சத்துணவு வழங்குவதற்கான பட்டியல் வழங்கப்பட்டிருக்கிறது என்று பள்ளியின் மாணவர் நல ஆசிரியர் நந்தகுமார் தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் இந்த இலவச உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளுக்குச் சுகாதாரத்துறை அதிகாரிகள் வருகைதந்து உணவுகளும் அவை தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும் முறைகளும் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்வார்கள்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசக் காலைச்சிற்றுண்டி வரவேற்கத்தக்கது என்று பள்ளி தலைமையாசிரியர் ஜோர்ஜ் தோமஸ் தெரிவித்தார்.

சீரான சத்துணவு வழங்கப்படுவதால் மாணவர்கள் உற்சாகத்துடன் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். சில சமயம் காலைச்சிற்றுண்டியை வீட்டில் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் பள்ளிக்கூடம் வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பேருதவியாக அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

பெற்றோரும் இந்தத் திட்டம் குறித்து மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். இப்பள்ளியில் இத்திட்டம் தொடங்கிய நாளன்று பேராக் கல்வி இயக்குநர் சார்பில் மாணவர் சமூகநல அதிகாரி சயூத்தி தஞ்சோங் கல்வி இலாகா மாணவர் நல அதிகாரி புவான் நோராய்ன், தனியார் கல்விப்பிரிவு அதிகாரி சந்திரா ஆகியோர் வந்திருந்தனர்.
நாடு முழுமையும் இத்திட்டத்தின் மூலம் 37 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

இதற்காக அரசாங்கத்திற்கு 2 கோடியே 20 லட்சம் வெள்ளி செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இத்திட்டம் கட்டங்கட்டமாக மற்ற பள்ளிகளுக்கும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here