கண்கள் திறக்க முடியாத அளவுக்கு திவ்யாஸ்ரீ சித்திரவதை!

தம்பதியருக்கு 7 நாள் காவல்

புக்கிட் மெர்தாஜம் –

புக்கிட் மெர்தாஜம், பெர்மாத்தாங் பாவ், அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது திவ்யாஸ்ரீ வளர்ப்புத் தாயாரால் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பற்றிய புலன் விசாரணையை போலீசார் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 36 வயதான வளர்ப்புத் தாயையும் 35 வயதான தந்தையையும் போலீசார் கைதுசெய்து காவலில் வைத்துள்ளனர். இவர்களை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸ் தரப்பு செய்துகொண்ட மனுவை புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று ஏற்றுக்கொண்டது என செபெராங் பிறை போலீஸ் தலைவர் நிக் ரோஸ் அஸ்ஹான் தெரிவித்தார்.

2001ஆம் ஆண்டு சிறார் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 31(1)(ஏ)இன் கீழ் அந்தத் தம்பதியர் விசாரிக்கப்படுகின்றனர். திவ்யாஸ்ரீ வளர்ப்புத் தாயால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்த பின் அந்தச் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாக மலேசியத் தமிழர் குரல் இயக்கத் தலைவர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

திவ்யாஸ்ரீயின் வீட்டில் இவரோடு 9 பிள்ளைகள் இருந்துள்ளனர். ஆனால், இவர் மட்டுமே கொடுமைக்கு ஆளாயினார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் திவ்யாஸ்ரீ உறவினர் பாதுகாப்பில் இருப்பார் என்று அவர் சொன்னார்.

இந்தக் கொடுமையில் இருந்து மீட்கப்பட்ட திவ்யாஸ்ரீ முதலில் யாரிடமும் பேச பயந்தார். தமிழர் குரல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவரிடம் பேசிய பிறகே, கொஞ்சம் தைரியம் வந்து அவர் தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்தார்.

என்னுடைய வளர்ப்புத் தாய் தலைக்கவசத்தால் என்னை அடித்தார் என்று திய்வாஸ்ரீ கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. திய்வாஸ்ரீயின் இரண்டு கண்களும் திறக்க முடியாத அளவுக்கு வீங்கியிருந்தன.

தலை, கை-கால், முகம், முதுகுப்பகுதியிலும் காயங்கள் இருந்தன என்று டேவிட் மார்ஷல் தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களாக திவ்யாஸ்ரீ கொடுமைக்கு ஆளானதும் தெரியவந்தது.

சிறுமியின் தந்தைக்குப் போதைப்பொருள் பழக்கம் இருந்திருக்கின்றது. திவ்யாஸ்ரீயின் வளர்ப்புத் தாய்க்குத் திருட்டுச் சம்பவம் தொடர்பான போலீஸ் வழக்கும் உள்ளது என்றும் மாவட்டப் போலீஸ் தலைவர் விவரித்தார்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டியும் திவ்யாஸ்ரீயை மீட்பதற்கு உதவியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here