புத்ராஜெயா –
கோவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக பரிதவிக்கும் மக்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறுவோருக்கும் எம்40 எனப்படும் நடுத்தர வருமானம் பெறுவோருக்கும் புதிய பொருளாதாரச் சலுகைத் திட்டத்தில் ஆயிரம் கோடி வெள்ளி ஒதுக்கப்படுகிறது.
மாதம் 4,000 வெள்ளிக்கும் குறைவான வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களுக்கு 1,600 வெள்ளி வழங்கப்படும். ஏப்ரல் மாதத்தில் ஆயிரம் வெள்ளியும் மே மாதத்தில் எஞ்சிய 600 வெள்ளியும் வழங்கப்படும் என்று பிரதமர் முஹிடின் யாசின் தெரிவித்தார்.
இதன்வழி நாடு முழுவதும் 40 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள்.
மாதந்தோறும் 4 ஆயிரம் வெள்ளியில் இருந்து 8 ஆயிரம் வெள்ளி வரை வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு ஆயிரம் வெள்ளி வழங்கப்படும்.
ஏப்ரல் மாதத்தில் 500 வெள்ளியும் மே மாதத்தில் 500 வெள்ளியும் வழங்கப்படும். நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதன்வழி பயனடைவர்.
மாதம் 2 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவான வருமானம் பெறுகின்ற திருமணம் ஆகாதவர்களுக்கு 800 வெள்ளி வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் 500 வெள்ளியும் மே மாதம் 300 வெள்ளியும் வழங்கப்படும். இதன்வழி 30 லட்சம் பேர் பயனடைவார்கள்.
அதே வேளையில் மாதம் 2 ஆயிரம் வெள்ளியில் இருந்து 4,000 வெள்ளி வரை வருமானம் பெறுகின்ற திருமணம் ஆகாதவர்களுக்கு 500 வெள்ளி வழங்கப்படும். ஏப்ரல் மாதத்தில் 250 வெள்ளியும் மே மாதத்தில் 250 வெள்ளியும் வழங்கப்படும். மொத்தம் 4 லட்சம் பேர் பயனடைவார்கள்.
சுகாதாரத்துறையில் பணியாற்றும் டாக்டர்கள், தாதியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு 400 வெள்ளி முதல் 600 வெள்ளி வரை சிறப்பு அலவன்ஸ் தொகை வழங்கப்படும்.
ராணுவத்தினர், போலீசார், சுங்கத்துறை, குடிநுழைவுத்துறை, ரேலா ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கு மாதம் 250 வெள்ளி சிறப்பு அலவன்ஸ் தொகை வழங்கப்படும்.
எம் 40 குறைந்த வருமானம் பெறுபவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவசாயிகள், சில்லறை வியாயாரிகள், தனியார்துறைத் தொழிலாளர்களுக்காக ஆயிரம் கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டிருக்கிறது.