தீயணைப்புத் துறையின் அடுத்த விமானத் தளம் ஜோகூரில் அமையவிருக்கிறது

பாசீர் கூடாங்:

லேசியத் தீயணைப்புத் துறையின் அடுத்த விமானத் தளத்தை அமைப்பதில் ஜோகூருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகூரை பெட்ரோலிய ரசாயன மையமாக உருவாக்கும் அரசாங்கத் திட்டத்தின்படி இது அமையவிருக்கிறது என்று செவ்வாய்க்கிழமை கூறினார் மலேசியத் தீயணைப்பு, மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் அப்துல் வாஹாப் மாட் யாசின்.

“தற்போது தீயணைப்புத் துறையின் ஒரே விமானத் தளம் மலேசியாவின் வடமாநிலமான பினாங்கின் பெர்டாமில் அமைந்துள்ளது. தென் மாநிலமான ஜோகூரில் ஒன்று, கிழக்கு மண்டலத்தில் திரெங்கானு அல்லது பாகாங்கில் ஒன்று, சாபா, சரவாக்கில் தலா ஒன்று என குறைந்தது மேலும் நான்கு விமானத் தளங்களை அமைக்க எங்கள் துறை திட்டமிட்டுள்ளது,” என்றும் அப்துல் வாஹாப் கூறினார்.

“செனாய் அனைத்துலக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள அரசாங்க நிலத்தைப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அலுவலகம் முதல் ஹெலிகாப்டர் புறப்படும்/தரையிறங்கும் தடம் வரை முழுமையான விமானத் தளத்தை அமைப்பதற்கு 50 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்றும் விவரித்தார் வாஹாப்.

“ஜோகூரில் விமானத் தளம் அமைவது மிகவும் முக்கியம். அதன் மூலம் இம்மாநிலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இடர்காப்பு உத்தரவாதம் கிடைக்கும்.

“மலேசியாவின் மத்திய மண்டலத்தில் உள்ள சுபாங் விமானத் தளத்துக்கு அடுத்த நிலையில் ஜோகூரில் விமானத் தளம் அமையும் என்று எதிர்பார்க்கிறோம். சுபாங் விமானத் தளத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது தயாராகி விடும்,” என்றும்  அவர் பகிர்ந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here