கோலாலம்பூர் –
கோவிட் – 19 கிருமித்தொற்று தாக்கத்தினால் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் உள்ள 10,000 பேரிடம் தீவிர மருத்துவப் பரிசோதனையை சுகாதார அமைச்சு மேற்கொண்டிருக்கிறது.
மருத்துவப் பரிசோதனைக்குக் கீழே இறங்கி வரும்படி சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் குடியிருப்பாளர்களுக்கு நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
மஸ்ஜிட் இந்தியாவில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இரண்டு கூடாரங்களை அமைத்துள்ளனர். இந்தக் கூடாரத்தில் இருக்கும் அனைவரிடமும் மருத்துவ அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.
மலாயன் மேன்சன், சிலாங்கூர் மேன்சன், மெனாரா ஓன் சிட்டி பகுதிகளில் மக்கள் நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு முள்வேலிக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதால் யாரும் வெளியேற அனுமதி இல்லை.
மெனாரா ஒன் சிட்டியில் 3 ஆயிரம் பேரும் மலாயன் மேன்சன், சிலாங்கூர் மேன்சனில் 6 ஆயிரம் பேரும் உள்ளனர். மேலும் இங்குள்ள கடை வீடுகள், மே டவர் குடியிருப்பிலும் பலர் தங்கியுள்ளனர்.
இந்தப் பகுதி முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ராணுவத்தினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
நேற்று நண்பகல் 12.00 மணிக்கு இங்குள்ள மக்களுக்கு தொண்டூழிய அமைப்புகள் உணவுப் பொட்டலங்களை வழங்கின.
முள்வேலிக் கம்பிகள் போடப்பட்டிருப்பதால் இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மஸ்ஜிட் இந்தியா வளாகம் முழுவதும் யாரும் உள்ளே நுழையாதவாறு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் கயிறு கட்டப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மாநகர மன்ற அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் இங்கு காவலில் ஈடுபட்டுள்ளனர்.
செமுவா ஹவுஸ், மைடின், கேம்பல், விஸ்மா கோசாஸ், விஸ்மா யாக்கின் உட்பட பல பேரங்காடிகளும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களும் இங்கு அதிகளவில் உள்ளன.