6 மாதத் தவணைத் தொகைக்குக் கூடுதல் வட்டியா?

ஷா ஆலம் –

கொரோனா காரணமாகப் பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவது 6 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது இந்த 6 மாதத்திற்கும் நிரந்தரக் கூடுதல் வட்டி விதிக்கப்படும் என பேங்க் நெகாரா மலேசியாவும் மலேசிய வங்கிகள் சங்கமும் கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்து நம்பிக்கைக் கூட்டணி செயலாளர் மன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த ஆறு மாதங்களுக்குரிய தொகைக்கு வட்டி விதிப்பது நெருக்கடியிலிருக்கும் மக்கள் நலனை வங்கித்துறை அலட்சியம் செய்திருக்கின்றது என்பதையே காட்டும் என்று அந்த மன்றம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

கெஅடிலான் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசீத்தியோன் இஸ்மாயில், அமானா கட்சியின் தொடர்புக்குழு இயக்குநர் காலிட் சமாட், ஜசெக வியூக இயக்குநர் லியூ ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

நாடு கொரோனா நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் பொருளாதார நிலை சவால்மிக்கதாக உள்ளது. ஆகவே நாடு, மக்கள் நலனுக்காக வங்கித்துறை தியாகம் செய்ய வேண்டுமென்று அந்த அறிக்கை கூறியது.

வங்கித்துறை மக்கள் நலன் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீடிப்பதாலும் பொருளாதாரம் நிலையற்றதாக இருப்பதாலும் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை வங்கிகள் கருத்தில்கொள்ள வேண்டும்.

ஒரு குறுகிய காலத்தில் வங்கிகளின் லாப அளவு குறைந்தாலும் நீண்ட கால அடிப்படையில் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படாது என்று அது கூறியது.

ஆகவே வட்டித் தொகை விதிப்பதை வங்கித்துறை மறுஆய்வு செய்ய வேண்டும். 6 மாதக் காலத்திற்கான தொகைக்கு வட்டி விதிக்கக்கூடாது என அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here