கலைச்செல்வன் மீது 4 குற்றச்சாட்டு

காஜாங் –

சாலைத்தடுப்புச் சோதனையின்போது பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் மீது வாகனத்தை மோதி மரணம் விளைவித்ததாக இந்திய நபர் மீது நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கே. கலைச்செல்வன் (வயது 44) எனும் அந்த ஆடவர் அண்மையில் லெக்காஸ் நெடுஞ்சாலைப் பகுதியில் சாலைத்தடுப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்த சஃபுவான் முகமட் இஸ்மாயில் எனும் அந்தப் போலீஸ் அதிகாரியை வாகனத்தால் மோதியுள்ளார்.

நேற்று நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்ட அவர் மீது 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 44 (1) (பி) அடிப்படையில் மது அருந்தி வாகனமோட்டி மரணம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

இதனைத் தொடர்ந்து சாலைத் தடுப்புச் சோதனையில் வாகனத்தை நிறுத்தும்படி காவல் அதிகாரியின் உத்தரவை மதிக்கத் தவறியதால் 1967 போலீஸ் சட்டம் பிரிவு 26 (2) கீழ் மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும் வாகனம் ஓட்டும் உரிமம் இன்றி சாலையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதால் கலைச்செல்வன் மீது 1987 சாலைத் தடுப்புச் சோதனைப் பிரிவு 26 (1) கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 மாதச் சிறைத்தண்டனையும் 300 வெள்ளியில் இரண்டு 2,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்பட்டலாம்.
தமிழ்மொழியில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பின்னர் கலைச்செல்வன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இவ்வழக்கில் வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் நோர்ஹானா சஹாட், கலைச்செல்வனுக்கு ஜாமீன் அனுமதிக்கப்படுமாயின் 30 ஆயிரம் வெள்ளி என நிர்ணயிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆனால் கலைச்செல்வன் தரப்பு வழக்கறிஞர் முகமட் ஹைஜான் ஒமார், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒரு நிறுவனத்தின் ஒரே உரிமையாளராவார்.
அவருக்குத் திருமணமாகி குடும்பம் உள்ளது. எனவே ஜாமீன் தொகையைக் குறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முகமட் கப்லி சே அலி, கலைச்செல்வனுக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20 ஆயிரம் வெள்ளி ஜாமீன் அனுமதித்தார்.

இந்த வழக்கு வரும் ஜூன் 18ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்திற்காகவும் கலைச்செல்வன் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

2020 தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் எதிர்ப்புச் சட்டம் பிரிவு 3 (1) கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 1,000 வெள்ளி அபராதம் அல்லது 6 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யப்படும்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முகமட் பிர்டாவுஸ் ரோஸ்லி, கலைச்செல்வனுக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் 1,000 வெள்ளி ஜாமீன் அனுமதித்தார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டு 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here