பெர்கேசோவின் ஏற்பாட்டில் வேலைவாய்ப்புத் திருவிழா: 10,000 வேலைவாய்ப்புகள்!

கோலாலம்பூர்:

மூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ (Perkeso) ஏற்பாடு செய்த இரண்டு நாள் ‘MYFutureJobs பிரீமியம் வேலைவாய்ப்புத் திருவிழா’ இன்றுடன் நிறைவடைந்தது. 

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 10,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இந்தத் திருவிழாவைப் பார்வையிட்ட மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

இந்தத் திருவிழாவில் வழங்கப்பட்ட வேலைகளுக்கான மாதச் சம்பளம் RM3,000 முதல் RM16,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் (MNC), அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLC) மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. இதில் உற்பத்தி, சேவை, செவிலியர் பணி, வங்கி மற்றும் தணிக்கை (Auditing) ஆகிய துறைகளில் அதிகத் தேவைகள் இருந்தன. குறிப்பாக சேவைத் துறையில் மட்டும் 30 சதவீத வேலைவாய்ப்புகள் இருந்தன.

வேலை தேடுபவர்களுக்கு உதவ ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய MyFutureJobs Career Exploration Centre தற்போது கோலாலம்பூர் சென்ட்ரலில் (KL Sentral) இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இது வேலை தேடுபவர்களின் சுயவிவரத்தை உருவாக்கி, அவர்களுக்கு ஏற்ற சரியான வேலையைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மலேசியாவில் சுமார் 5,900 பேர் வேலை இழந்துள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர், உலகளாவிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் “மடானி அரசாங்கத்தின் ஒரு அங்கமாக, எதிர்வரும் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கான விரிவான ‘நெருக்கடி கால ஆதரவு திட்டங்களை’ (Crisis Support Initiatives) அமைச்சகம் அறிவிக்கவுள்ளது.” என்று டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.

இந்த வேலைவாய்ப்புத் திருவிழா விரைவில் போர்னியோ (சபா, சரவாக்) பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது என்றும், இந்த ஆண்டு MyFutureJobs மூலம் மொத்தம் 2,00,000 பேருக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதை அமைச்சகம் இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்தில் (EIS Act) சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, தொழிலாளர்களுக்குப் கூடுதல் சமூகப் பாதுகாப்பு மற்றும் மறுபயிற்சி (Reskilling) திட்டங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here