4 மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு

பறிபோனது இந்தியர்களின் உரிமை

கோலாலம்பூர் –

நம்பி வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்து அணி மாறிய சுயநல அரசியல்வாதிகளால் இதுவரை நான்கு மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.

ஜோகூர், மலாக்கா, பேராக் மற்றும் கெடாவில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.

அடுத்து ஆட்சி கவிழப்போவது எந்த மாநிலம் என்பது பெரும் புதிராக இருக்கும் வேளையில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கங்கள் விழிப்பு நிலையில் உள்ளன.

கடந்த 2008இல் நடந்த பொதுத்தேர்தலில் சிலாங்கூர், பினாங்கு, பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் மக்கள் கூட்டணி அரசாங்கம் ஆட்சி அமைத்தது. ஓராண்டுக்குள் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அணி தாவியதால் பேராக்கில் ஆட்சி பறிபோனது. இதனால் ஆட்சிக்குழுவில் இடம் பெற்ற வழக்கறிஞர் அ. சிவநேசன், பேராக் மாநில சபாநாயகர் வி. சிவகுமார் ஆகியோர் தங்களது பதவிகளை இழந்தனர்.

மலேசிய வரலாற்றில் பேராக் மாநிலத்தில்தான் முதல் இந்திய சபாநாயகராக சிவகுமார் பதவியேற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரும் வலுக்கட்டாயத்தின் பேரில் பதவியை இழந்தார்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டில் நடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்தார்கள். துன் டாக்டர் மகாதீரின் வருகை பக்காத்தான் ஹராப்பானுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

இதன் மூலம் பக்காத்தான் ஹராப்பான் மத்திய அரசாங்கத்தையும் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், கெடா, பினாங்கு ஆகிய மாநிலங்களையும் கைப்பற்றியது.

தேசிய முன்னணி காலத்தில் அமைச்சரவையில் ஒருவர் அல்லது இரண்டு இந்தியர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 60 ஆண்டுகாலத்திற்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் நான்கு இந்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். மலேசிய வரலாற்றில் நான்கு இந்தியர்களுக்கு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

மனிதவள அமைச்சராக எம். குலசேகரன், தகவல்துறை அமைச்சராக கோபிந்த் சிங் டியோ, நீர், இயற்கை வளம், எரிசக்தி துறை அமைச்சராக டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார், பிரதமர் துறை அமைச்சராக பொன். வேதமூர்த்தி ஆகியோருடன் புறநகர் மேம்பாட்டுத்துறை துணையமைச்சராக வழக்கறிஞர் ஆர். சிவராசாவும் பதவியேற்றனர்.

அதே சமயம் பினாங்கு மாநிலத்தில் துணை முதல்வராக 3ஆவது முறையாக பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி பதவியேற்ற வேளையில், ஜக்டிப் சிங் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றார்.

பேராக் மாநிலத்தில் வழக்கறிஞர் அ. சிவநேசன், ஜோகூர் மாநிலத்தில் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், மலாக்கா மாநிலத்தில் ஜி.சாமிநாதன், கெடா மாநிலத்தில் ரெ. சண்முகம், சிலாங்கூர் மாநிலத்தில் வீ. கணபதிராவ் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சட்டமன்ற துணை சபாநாயகராக எம். ரவியும் ஆட்சிக்குழுவில் ஜெ. அருள்குமார், எம். வீரப்பன் ஆகியோரும் இடம் பெற்றனர்.
இவ்வாண்டு பிப்ரவரி மாத மத்தியில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்தது. கெஅடிலான் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அணி தாவினார். பெர்சத்து கட்சியும் பக்காத்தான் ஹராப்பானில் இருந்து வெளியேறியது.

இதனால் 22 மாதம் ஆட்சி புரிந்த பக்காத்தான் ஹராப்பானுக்குப் பதில் அம்னோ, பாஸ், ம.இ.கா., ம.சீ.ச., சரவாக் ஜிபிஎஸ் கட்சிகளை இணைந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை அமைக்க டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராகப் பதவியேற்றார்.

இப்போது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ எம்.சரவணன், கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சராக டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா ஆகியோர் உள்ளனர்.

மத்தியில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி பறிபோனதால் நான்கு இந்தியர்கள் அமைச்சர் பதவிகளை இழந்தனர்.

இப்போது கெஅடிலான் சின்னத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றவர்கள் சிலர் வாக்களித்த மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டு அணி தாவியுள்ளனர்.

அணி தாவிய இவர்களால் கெடா, பேராக், மலாக்காவில் இந்தியர்களின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியும் பறிபோயுள்ளது. பேராக்கில் சிறப்பாக மக்கள் பணியாற்றிய வழக்கறிஞர் அ. சிவநேசன், மலாக்காவில் ஆட்சிக்குழுவில் இடம்பெற்ற ஜி. சாமிநாதன், கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் ரெ.சண்முகம் ஆகியோர் பதவியை இழந்துள்ளனர்.

ஜோகூரில் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை இழந்தாலும் அவருக்குப் பதில் ம.இ.கா. சார்பில் ஆர். நித்தியானந்தன் ஆட்சிக்குழுவில் இடம் பிடித்துள்ளார்.

ஆனால், கெடா, பேராக், மலாக்காவில் ஆட்சிக்குழு பதவி பறிபோனது பறிபோனதுதான். அங்கு மாற்றம் இல்லை.

வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் துரோகம் இழைத்ததன் பேரில் இந்திய சமுதாயம் 3 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியை பறிகொடுத்திருப்பது பெருத்த வேதனையாகும்.

இந்த மூன்று மாநிலங்களிலும் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஆட்சிக்குழுவில் யாரும் இல்லை. பறிபோனது ஆட்சிக்குழு பதவிகள் மட்டுமல்ல. நமது உரிமைகளும்தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here