குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில் போலீஸார் ஆங்காங்கே சாலை தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கூட்டரசு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் சாலை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர் நிக் எஸானி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மதுமானத்தை வைத்து குடித்துக் கொண்டே சென்றிருக்கிறார். மேலும் ஒருவருக்கு கார் லைசென்ஸ் இல்லை ஆனாலும் குடித்து விட்டு வாகனத்தை செலுத்தி இருக்கிறார்.
அண்மையக் காலமாக குடித்து விட்டு வாகனத்தை செலுத்தி வருவதால் பல விபத்துகள் ஏற்படுகின்றன. அதில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனை முற்றிலும் தடுக்க போலீஸார் பெட்டாலிங் ஜெயா வட்டாரம் முழுவதும் சாலை தடுப்புகள் பலப்படுத்தியுள்ளனர். குடிபோதையில் வாகனத்தை செலுத்தி தங்களின் வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் கெடுத்து விடாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.