கர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்!

தனது பசியை போக்கிக் கொள்ள ஆசையாய் அன்னாசி பழத்தை சாப்பிட சென்ற கர்ப்பிணி யானைக்கு ஏற்பட்ட சோகமான முடிவு.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே யானை ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. வயல்வெளிகள், நீர் நிலைகள், காடுகள் என சுற்றி திரிந்த யானை திடீரென இறந்து ஆற்றில் மிதந்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கான காரணம் குறித்து மலப்புரம் மாவட்ட வன அதிகாரி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்துள்ளது. இந்த சூழலில் அதற்கு சிலர் அன்னாசி பழம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதை வாங்கி உண்ணும் போது பழம் வெடித்து சிதறியது.

இதனால் யானையின் வாய் மற்றும் நாக்கு பகுதிகள் படுகாயமடைந்தன. அப்போது வயிற்றில் இருக்கும் குட்டி யானையின் நிலையை எண்ணி தாய் யானை மிகவும் கலங்கி இருக்கக்கூடும். ஆனால் வழியில் கண்ட யாரையும் அது துன்புறுத்தவில்லை.

வாயில் ஏற்பட்ட காயத்தால் அடுத்த சில நாட்களுக்கு எதையும் உண்ண முடியாமல் தவித்துள்ளது. இதனால் பசி வாட்டி எடுத்தது. அந்த யானை உயிர் பிழைக்க வேறு வழிகள் ஏதும் தென்படவில்லை. இந்த சூழலில் தான் ஆற்றில் இறங்கியுள்ளது.

அடுத்த சில நிமிடங்களில் வலி தாங்க முடியாமல் மயங்கி சரிந்திருக்கும். அந்த ஆற்றிலேயே அதன் உயிர் பிரிந்துள்ளது. இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். அந்த யானையை லாரியில் ஏற்றி காட்டுக்குள் கொண்டு சென்றோம்.

அங்கு வைத்து மருத்துவர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அப்போது தான் அதன் வயிற்றில் குழந்தை ஒன்று இருந்தது எங்களுக்கு தெரியவந்தது. இந்த நிகழ்வு எங்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.பின்னர் அந்த யானைக்கு உரிய மரியாதை செலுத்தி தலைவணங்கி எரியூட்டினோம். இந்த சம்பவத்தை மிகவும் மன வேதனையுடன் பதிவு செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து பலரும் யானையின் உயிரிழப்பை எண்ணி தங்கள் வேதனையை பதிவு செய்து வருகின்றனர்.

யானைகள் ஊருக்குள் வருகின்றன என்றால் அதன் வாழ்விடத்தில் மனிதர்கள் அத்துமீறியது தான் காரணமாக இருக்கக்கூடும். அதற்காக ஊருக்குள் வந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடிக்க தான் முயற்சிக்க வேண்டும். இப்படி கொலை செய்யும் அளவிற்கு தீய எண்ணங்களை விதைத்துக் கொள்ள வேண்டாம் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here