பெண்குயின்

நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான ரிதம் (கீர்த்தி சுரேஷ்), கணவன் கவுதமுடன் (மாதம்பட்டி ரங்கராஜ்) வாழ்ந்து வருகிறார். ஆனால் அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அஜய் (அத்வைத்) என்றொரு குழந்தை உண்டு. அந்தக் குழந்தை சிறுவயதில் காணாமல் போனதால், முந்தைய கணவனுடன் (லிங்கா) விவாகரத்து செய்துவிட்டு, கவுதமை திருமணம் செய்துகொண்டிருக்கிறாள் ரிதம்.

இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு, காணாமல் போன குழந்தை அஜய் கிடைத்துவிடுகிறேன். ஆனால், அவன் எதையும் பேச முடியாத நிலையில் இருக்கிறான். அஜய்யை கடத்தியவன் முகமூடி அணிந்தவாறு வந்து மீண்டும், மீண்டும் மிரட்டுகிறான். அந்தக் கடத்தல்காரன் யார், அவன் எதற்காக குழந்தையைக் கடத்துகிறான் என்பதை ரிதம் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரிதம் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ். காணாமல் போன தனது குழந்தை மீண்டு வருவான் என்ற நம்பிக்கையில் தவிப்பதாகட்டும், தனது குழந்தையை எப்படியேனும் மீட்க துணிவதாகட்டும், ஒட்டுமொத்த படத்தையும் தனது அபார நடிப்பால் தோளில் சுமந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கர்ப்பிணி பெண்ணுக்கான உடல்மொழி உள்ளிட்டவற்றை நேர்த்தியாக செய்துள்ளார்.

மற்ற கதாபாத்திரங்களான மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா, குழந்தை அத்வைத் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கின்றனர். குறிப்பாக டாக்டராக வரும் மதியின் நடிப்பு அட்டகாசம்.

படம் ஆரம்பத்தில் மெல்ல நகர்ந்தாலும் போகப்போக வேகமெடுக்கிறது. ஆங்காங்கே வரும் டுவிஸ்ட்டுகள் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன. பெண்களின் வலிமை அசாத்தியமானது, தாய் பாசத்திற்கு நிகர் எதுவும் இல்லை என்பதை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் மூலம் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். வலுவான திரைக்கதை படத்திற்கு பலம்.

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். இசையின் மூலம் திரில்லர் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, மலைபிரதேசத்தை அழகாகவும், படத்துக்கு தேவையான மர்மமான தன்மையுடனும் திறம்பட காட்சிப்படுத்தியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here