மதுரை மீனாட்சி அம்மன் பற்றிய அபூர்வ தகவல்கள்

மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். வருடம் முழுவதும் மீனாட்சியம்மனுக்கு திருவிழாக்காலம் தான் என்றாலும், சித்திரைத் திருவிழாவுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.
1. மீனாட்சியம்மனுக்கு ஒருவருடத்தில் கிட்டத்தட்ட 274 நாள்கள் திருவிழா நடைபெறும்.
2. ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சிவபெருமானை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது. ஆண்டுமுழுவதும் நடைபெறும் வீதியுலாக்களில் மொத்தம் 16 முறை மட்டுமே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறார். அந்த வகையல் சித்திரைத் திருவிழாவின் 2 மற்றும் 12-ம் திருநாள்களில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

3.  சித்திரைத் திருவிழாவின் 4-ம் நாளில், சுவாமி, அம்பாளுடன் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருள்வார். பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் பெருமான், பக்தர்களின் பாவங்களைக் காய்ந்துபோகச் செய்து நிவாரணம் அளிப்பதால் இது பாவக்காய் மண்டபம் எனப் பெயர் பெற்றது.

4. மதுரையில் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்களான, வேடர்பறி லீலை, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவின்போது செய்து காட்டப்படும்.

5. முன்பு திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த, திருமலை நாயக்கருக்கு, மண்டைச்சளி என்னும் நோய் வந்து அவரை மிகவும் வருத்தியது. ஒருநாள் அவரின் கனவில் ஒலித்த அசரீரி ஒன்று ‘மதுரைக்குப் போய் திருப்பணிகள் செய்’ என ஒலித்தது. அந்த அசரீரி கூறிய வண்ணம் அவர் மதுரையில் திருப்பணி செய்தார். இதனால் அவரை பிடித்திருந்த நோய் நீங்கியது. அதன்பிறகு அவர், மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். திருமலை நாயக்க மன்னரின் ஆட்சியில் தான் கோயில் விரிவாக்கம் பெற்று பொலிவு பெற்றது என அங்குள்ள ஓலைசுவடுகள் தெரிவிக்கின்றன.

6. திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்புவரை, மீனாட்சி சுந்தரேசுவரருக்குத் தைப்பூசத்தில் திருக்கல்யாண உற்சவமும் மாசிமாதத்தில் தேரோட்டமும், மாசிமகத்தன்று ‘மீனாட்சி பட்டாபிஷேகமும்’ நடைபெறும் வழக்கம் இருந்ததாம்.

7. மீனாட்சியம்மன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான ‘வேப்பம்பூ’ மாலையானது பட்டாபிஷேகத்தின் போது சூட்டப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here