வறுமையில் தவிக்கும் பருத்தி வீரன் பட கிராமிய பாடகி

சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ வைத்த பல நடிகைகள் தற்போது வறுமையில் வாடி வருகின்றனர். இதுபோல் கிராமிய பாடகி ஒருவர் வருமானத்திற்கு வழியின்றி வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இவர் வேறு யாருமல்ல… நடிகர் கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தில் “ஊரோரம் புளியமரம்….“ என்ற கிராமிய பாடலை பாடிய லட்சுமி அம்மாள் தான்.
இவருக்கு தற்போது 70 வயதாகிறது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜெகஜீவன்ராம் தெருவில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
இவர் மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்பட 5-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். கிராமப்புற பாடல்கள் பாடி ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் ஊருக்கு வந்த அவர், தற்போது வருமானம் இல்லாமல் உணவுக்கும், மருந்துவம் பார்க்கவும் வழியின்றி தவித்து வருகிறார்.
இதுகுறித்து லட்சுமி அம்மாள் கூறியதாவது:-
கும்மிபாட்டு, தாலாட்டு பாட்டு, தெம்மாங்கு பாட்டு, பக்தி பாடல்களை 50 ஆண்டுகளாக கச்சேரியில் பாடி வந்தேன். இதற்கு வரவேற்பு கிடைத்ததால் பரவை முனியம்மாளுடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு சினிமாவிலும் சம்பாதித்தேன். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ செலவுக்கே சம்பாதித்த பணம் செலவாகி விட்டது. குடியிருந்து வரும் வீடும் மழை காலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளது. தற்போது வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் சாப்பாட்டிற்கே மிகவும் க‌‌ஷ்டமான நிலையில் இருந்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here