நம்பிக்கை இல்லாமல் போவது

நம்பிக்கை என்னும் காரியத்தில் மிகவும் கடினமான சோதனைக்குள்ளானவர் கண்டிப்பாக கன்னி மரியாதாம். நம்பிக்கை கொண்டோரின் தந்தை என்று அழைக்கப்படும் ஆபிரகாமும் பழைய ஏற்பாட்டு நேர்மையாளரான யோபுவும் மாதாவுக்கு நிகராக மாட்டார்கள்! அவ்வளவு கொடிய சோதனைகளை மாதா ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
இருந்தும் அவர் நம்பிக்கையில் நிலைத்திருத்தார். உறுதியாக இருந்தார். ஒரு சிறுசோதனை வந்தால்கூட பலர் இறைவனைவிட்டு விலகி விடுகின்றனர். நாற்பது ஆண்டுகள் சோதனைக்குள்ளான போது இஸ்ரயேலர் கூட இறைவனிடமிருந்து விலகினர். அவர்களுள் பலர் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுத்தனர். தங்களுக்கென ஒரு தலைவனை நியமித்துக் கொண்டு எந்த எகிப்திலிருந்து தப்பியோடி வந்தனரோ அதே எகிப்துக்கு மீண்டும் அடிமைகளாகச் செல்ல நினைத்தனர் (எண் 14 : 1 – 4).

யோபுவின் பிள்ளைகள் அனைவரும் இறந்தனர். அவரது சொத்துக்கள் அனைத்தும் அழிந்தன. யோபுக்கு கொடிய நோய் வந்தது அவரது காயங்களில் புழு அரித்தது. அவரது நண்பர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர். ஆனால் அவர் இறைவனைப் போற்றித் துதிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவரது மனைவி கூட பின்வருமாறு பரிகாசம் செய்தாள்: இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிaர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே? (யோபு 2 : 9). சோதனை வந்தபோது அவள் கடவுளை விட்டு விலகினாள்.

ஆண்டவர் இயேசு திவ்விய நற்கருணையைப் பற்றி போதித்த போது விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். என்று சொன்ன போது (யோவா 6 : 51), அதுவரை அவரைப் பின்பற்றிய சீடர்களுள் பலர் முணுமுணுத்தனர்.

பலர் அவரை விட்டு விலகினர் (யோவா 6 : 66). ஆனால் தூய கன்னி மரியாவோ இறைவனை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருந்தார்! பயப்படும் குழந்தை தன் தந்தையின் கழுத்தை இறுக்கி பிடித்து மார்பில் சாய்ந்து கொள்வதுபோல் மாதா ஒவ்வொரு சோதனையிலும் இறைவனைக் கெட்டியாகப் பிடித்து நம்பிக்கையில் உறுதியடைந்தார்! இது தான் மாதாவுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். நாம் சோதனையில் இறைவனிடமிருந்து விலகிச் செல்கிறோம். ஆனால் மாதா இறைவனோடு இணைந்திருந்தார். நம்பியதால் பேறுபெற்றவரான மாதா வழியில் செல்ல இறைவன் நமக்கு அருள்புரிவாராக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here