பிரதமரை உடனே விடுவிக்க வேண்டும் – ஐநா வலியுறுத்தல்

மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம் காதி. இங்குள்ள ராணுவத் தளம் அருகே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றதாக தெரிகிறது. ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்தன. இது ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான சதியாக இருக்கலாம் என கூறப்பட்டது.

இதனால் ராணுவ வீரர்களிடம் பிரதமர் பவ்பவ் சிஸ்சே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். கிளர்ச்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் உருவானதற்கு காரணமாக யார் இருக்கிறார்கள் என்று உடனடியாக தெரியவில்லை. மேலும், மாலி நாட்டின் மந்திரிகள், சில ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் அதிபர் வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக கலகம் செய்யும் ராணுவத்தினரின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் மாலியில் ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டுள்ள மாலி அதிபர் மற்றும் பிரதமரை எந்த நிபந்தனைகளும் இன்றி உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here