மெட்ரோ ரெயிலை இயக்க ஏற்பாடுகள் தயார்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் இருந்தாலும், மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை செய்து வருகிறது. சினிமா படப்பிடிப்புகளுக்கு சமீபத்தில் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதியில் இருந்து மெட்ரோ ரெயில் இயக்கத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களை இயக்க, மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளது. குறிப்பாக மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு முக்கிய நுழைவு வாயில்களில் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்ய தெர்மல் ஸ்கேனர் கருவியும், தானியங்கி கிருமி நாசினி தெளிப்பு நுழைவு வாயில் வழியாக பயணிகள் சென்று வருவதற்கும், அவர்களது உடமைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் 10 நிமிடம் அல்லது 15 நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரெயில்களை இயக்க முடிவு செய்திருப்பதாகவும், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும் ரெயில்களில் 350 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது ஒரு ரெயிலில் 350 பயணிகள் இருந்தால், கூடுதலாக பயணிகள் ஏற்றப்படமாட்டார்கள். பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரெயிலில் 350 பயணிகள் இருந்தால், அடுத்த ரெயில் நிலையத்தில் யாராவது இறங்கினால் மட்டுமே, அவர்களுக்கு பதிலாக கூடுதல் பயணிகள் ஏற்றப்படுவார்கள்.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுபோன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரெயில் அதிகாரிகள், ஊழியர்கள் பயணிகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களை இயக்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here