கலைமாமணி விருது பெற்ற நாடக எழுத்தாளர் காலமானார்

கலைமாமணி விருது பெற்ற நாடக எழுத்தாளர் பட்டுக்கோட்டை குமாரவேல். நேற்று, சென்னையில் காலமானார்.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, ராஜமடத்தில், 1925 பிப் 26ல் பிறந்தவர், பட்டுக்கோட்டை குமாரவேல்.

நாடக ஆசிரியர்யான அவர், 1947ல், திருச்சி வானொலி நிலைய கலைஞராய் சேர்ந்து, திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில், உயர் நிலை எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், 36 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

பட்டுக்கோட்டை குமாரவேல், 1,000க்கும் மேற்பட்ட நாடங்களுக்கு மேல் எழுதி, தயாரித்தவர். அவரின் நாடகங்களை பாராட்டி, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., கலைமாமணி விருது வழங்கி, கவுரவித்தார்.

குமாரவேல் எழுதிய, ‘வாழ்வு நம் கையில்’ என்ற மேடை நாடகம், தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது. அவர் எழுதிய, ‘ஸ்ரீ ராமானுஜர் வரலாற்று நாடகம்’ சென்னை பல்கலையில், 2004- 05ம் ஆண்டிற்கான, எம்.ஏ., வகுப்பிற்கு பாட நுாலாக வைக்கப்பட்டது.

அவர் எழுதிய, ‘வானொலி நிகழ்ச்சிக்கலை’ என்ற நுால், அவருக்கு, அமெரிக்க அரிசோனா பல்கலையில், முனைவர் பட்டம் பெற்று தந்துள்ளது. அவர், சிந்து மலர் வெளியீடு, அலமேலு பதிப்பக உரிமையாளர் ஆவார். அவருடைய, வரலாற்று நாடகங்களான புத்தர் பெருமான், சிலுவை நாயகன், ஸ்ரீ ராமானுஜர், வள்ளலார் திருஅருட்பிரகாசர் ஆகிய நுால்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

உலக தமிழ் எழுத்தாளர் சங்க பொதுச்செயலராக பொறுப்பு வகித்த குமாரவேல், வயது முதிர்வின் காரணமாக, சென்னை, திருவான்மியூரில், நேற்று மாலை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.அவருக்கு, துரைபாண்டியன் என்ற மகனும், சாந்தி தணிகாசலம், கண்ணம்மாள் சோமசுந்தரம் என்ற மகள்களும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here