வீடுகளை உடைத்தால் குடியிருப்பாளர்களுடன் போராட்டத்தில் இறங்குவோம்-பி.பிரபாகரன் திிட்டவட்டம்

இன்னும் இரண்டு நாட்களில் உடைப்படும் அபாயத்தை ஜாலான் லங்காக் புக்கிட் கம்பம் எட்டியிருக்கிறது.

வரும் 24 ஆம் தேதி மேம்பாட்டு நிறுவனம் இந்த கம்பத்தை உடைக்கப் போவதாக கூறியுள்ளது.

வீடுகளை உடைத்தால் குடியிருப்பாளர்களுடன் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அங்குள்ள மக்கள் குடியிருக்கும் நிலத்தை மேம்பாட்டு நிறுவனம் வாங்கியிருப்பதால் கடந்தாண்டு குடியிருப்பாளர்களை காலிச் செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இதே இடத்தில் வாழ்ந்த இவர்கள் திடிரென வெளியேறச் சொன்னதும் எங்கே செல்வது என்று திக்குமுக்காடிப் போய் நின்றனர்.

இங்கு மொத்தம் 10 வீடுகள் இருக்கின்றன. 14 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் குடியிருந்த நிலத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்நிறுவனம் குறியாக இருக்கிறது.

மக்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என்று குடியிருப்பாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் விண்ணப்ப மனு கோரப்பட்டது. ஆனால் அதில் குடியிருப்பாளர்கள் தரப்பு தோல்வி கண்டது. எனவே குடியிருப்பாளர்களை அங்கிருந்து விரைந்து வெளியேறுமாறு மேம்பாட்டு நிறுவனம் கேட்டு கொண்டது.

சிலருக்கு வீடுகள் கிடைத்து வெளியேறியவர்களும் இருக்கின்றனர். பிபிஆர் வீடுகள் கிடைத்து இன்னும் சாவி கிடைக்காமல் இருக்கின்றவர்களும் இருக்கின்றனர். அதே போன்று வீட்டிற்காக விண்ணப்பம் செய்து இன்னும் கடிதம் எதும் கிடைக்காதவர்களும் இருக்கின்றனர்.

ஏற்கெனவே மேம்பாட்டு நிறுவனம் இங்குள்ள வீடுகளை உடைக்க வந்த போது, அவர்களிடம் கால அவகாசமாக 14 நாட்கள் கேட்டோம். இருந்தும் குடியிருப்பாளர்களின் வீட்டு பிரச்சினைகள் தீரவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காலை 10 மணியளவில் மேம்பாட்டு நிறுவனம் மீண்டும் வீடுகளை உடைக்க வந்தது. ஆனால் தமது தலைமையில் குடியிருப்பாளர்களின் வழக்கறிஞர் ராஜேஸ்வரி ஆகியோர் மேம்பாட்டு நிறுவன தரப்பினரிடம் கலந்து பேசி மீட்சியுறும் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை முடியும் வரை அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் போலீசாருக்கும் கடிதம் அனுபப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதி வரை அதாவது மீட்சியுறும் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை முடியும் வரை குடியிருப்பாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் . இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என்றும் பிரபாகரன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here