முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்(82) காலமானார்.

உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜஸ்வந்த் சிங்(82), சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜஸ்வந்த் சிங் டார்ஜிலிங் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் கதக்வாலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு பயிற்சி பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் மயோ கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். 1960 இல் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர். பின்னர் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்காலத்தில் நிதி, வெளியுறவு, பாதுகாப்புத்துறை பொறுப்புகளை வகித்தவர். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

2001 இல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதினை பெற்றவர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்புகளை வசித்தவர், பாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் என புகழாரம் சூட்டிய மோடி, முதலில் ஒரு ராணுவ வீரராகவும் பின்னர் அரசியல், சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here