ரூ.320 கோடி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது

பாகிஸ்தானில், 320 கோடி ரூபாய் மோசடி வழக்கில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப், நேற்று கைதானார். அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்க்கட்சியான பாக்., முஸ்லிம் லீக் தலைவராக இருப்பவர் ஷாபாஸ் ஷெரீப், 69.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரான இவர், 2008 முதல், 2018 வரை, அங்குள்ள பஞ்சாப் மாகாண முதல்வராக இருந்தார்.அப்போது இவரும், இவரது குடும்பத்தினரும் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், 320 கோடி ரூபாய் மோசடி வழக்கில், ஷாபாஸ் ஷெரீப் நேற்று கைது செய்யப்பட்டார். பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசை ஆட்சியில் இருந்து அகற்ற, எதிர்க்கட்சிகள் இணைந்து நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கத்தை துவங்கியுள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கைதான ஷாபாஸ் ஷெரீப், லாகூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது கட்சி தொண்டர்கள் திரண்டு, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே, ஷாபாஸ் ஷெரீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடி செய்யபட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் ஹம்சா, சல்மான் ஆகியோர், போலி கணக்குகள் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமரின் ஆலோசகர் ஷாஜாத் அக்பர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here