புரட்டாசி சனிக்கிழமை -4

உலகத்து மக்களின் துன்பங்களை குன்று எடுத்து போக்கினான் கண்ணன். ‘குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி’ என போற்றி அருளுகின்றார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார். அது போல, மக்களின் குறைகளைப் போக்க, பெருமாள் அருள்புரியும், ‘குமுளம்பட்டு’ என்ற தலம் சிறப்பாக விளங்குகிறது.

‘பேசும் பெருமாள்’ என்று சிறப்பித்து அழைக்கப்படும், ‘ஸ்ரீநிவாசப்பெருமாள்’ இங்கு கோவில் கொண்டு அருள் வழங்குகிறார்.நந்தவன பணிதிண்டிவனம் அருகே குமுளம்பட்டு அமைந்துள்ளது. சுமார், 600 ஆண்டுகளுக்கு முன், அண்ணா செட்டியார் என்பவர், இவ்வூரில் வாழ்ந்து வந்தார். பரப்பிரம்மமாக விளங்கும் ஸ்ரீமத் நாராயணன் எழுந்தருளும் குமுளம்பட்டு தலத்தில், ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பக்தியுடன் நித்ய பூஜைகள் மேற்கொண்டு வந்தார்.ஒருநாள், அவருடைய கனவில் தோன்றிய பெரியாழ்வார், குமுளம்பட்டு திருத்தலத்தில், சேவை சாதிக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு நந்தவனம் அமைத்து, மலர் மாலை கைங்கர்யங்கள் செய்து வருவாயாக என்று அருளினார்.

அடர்ந்த காட்டில் குடி கொண்டிருந்த பெருமாளுக்கு, மலர்மாலைகள் அணிவிக்க, பலவித மலர் செடிகள் கொண்ட நந்தவனம் அமைத்து, தொண்டுகள் செய்தார். இந்நிகழ்ச்சி, வைணவ அடியாரான தொண்டரடிப்பொடி ஆழ்வாரை நமக்கு நினைவூட்டுகிறது.நந்தவனத்திலிருந்து மலர்களைப் பறித்து, மலர் மாலையாகத் தொகுத்து பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தார். திராவிட வேதமாக விளங்கும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், ஆழ்ந்த புலமை கொண்ட அவர் அளித்த விளக்கங்கள், மக்களைப் பெரிதும் கவர்ந்தது. அறிவுரைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட மக்கள் அண்ணா செட்டியார் அளித்த துளசி தீர்த்தத்தையும், விபூதிப்பிரசாதத்தையும் பெற்று, தங்கள் குறைகள் நீங்குவது கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.விபூதி பிரசாதம்பெருமாளுக்கு நைவேத்யம் செய்ய பயன்படுத்திய, அடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலையே விபூதிப் பிரசாதமாக அளித்தார்.

அது, மக்களுக்கு மன நிறைவினை அளித்தது. இன்றும், இக்கோவிலில் விபூதிப் பிரசாதம் அளிக்கப்படுகிறது.திருப்பதி பெருமாள்பெருமாள் கைங்கர்யத்தைத் தொடர்ந்த செட்டியாருக்கு, இத்தலத்தில் வழிபாடுகள், உற்சவங்கள் நடத்த, உற்சவத் திருமேனி இல்லையே என, வருத்தம் இருந்தது. ஒருநாள் காலை, சில வைணவ பாகவதர்கள்அவரைப் பார்த்து, ‘நாங்கள் திருமலையிலிருந்து வருகிறோம். எம்பெருமானின் ஆணைப்படி திருமேனிகளை திருப்பதியிலிருந்து கொண்டு வந்துள்ளோம்.

இதை கோவிலில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டனர். இறைவனின் கருணையால் வந்த இத்திருமேனியை, ‘திருப்பதி பெருமாள்’ என்றே இப்பகுதி மக்கள் போற்றி வணங்குகின்றனர். மேலும், இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் தாயார் ஸ்ரீபத்மாவதி தாயார் என்றே அழைத்து போற்றப்படுகின்றார்.பேசும் பெருமாள்கிழக்கு நோக்கிய திருக்கோவில் நுழைவு வாயிலை அடுத்து, துவஸ்த்தம்பமும் பெரிய திருவடியான கருடாழ்வாரும் எழுந்தருளியுள்ளனர். கருவறையில் பேசும் பெருமாளான ஸ்ரீநிவாசப்பெருமாள் எழுந்தருளி அருள்புரிகின்றனர்.இக்கோவிலில் பக்தர்கள் தம் குறைகளை எடுத்துக்கூறி, மனம் உருகி வழிபட்டால், பக்தர்களின் கனவில் தோன்றி குறைகளை போக்கி அருள்புரிகின்றனர்.

மேலும், வழிபடும்போதே அசரீரியாக வேண்டும் வரங்களை அளிப்பதால் பேசும் பெருமாள் என்று மக்கள் சிறப்புடன் போற்றி வழிபட்டு நலமடைகின்றனர்.அமாவாசை சிறப்பு வழிபாடுஇக்கோவிலில், அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு, ஒன்பது அமாவாசை தினங்கள் தொடர்ந்து பெருமாளின் தீர்த்த பிரசாதத்தை அளித்தும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டால், பேசாத குழந்தைகளையும் பேச வைக்கும் பேசும் பெருமாளாக கோவில் கொண்டுள்ளார்.ஆட்டிசம் நோய் போக்கும் பெருமாள்மேலும், சில குழந்தைகள் மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை, இத்தலத்திற்கு அழைத்து வந்து, நெய் தீபம் ஏற்றி வழிபட நோயின் தாக்கம் குறைவதும், பலர் நலமடைந்தும் வருகின்றனர்.

புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கும், கோவில் எதிரில் உள்ள வனபுஷ்கரணியில் நீராடி சந்நிதியில் தொட்டில் கட்டி, ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்குகின்றனர்.இக்கோவிலின் திருச்சுற்றில் தாயார் சந்நிதி, சக்கரத்தாழ்வார், ஆண்டாள், பக்த ஆஞ்சநேயர் சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோவில், 2016, ஆக., 21ல் குடமுழுக்கு நடைபெற்று, புதுப்பொலிவுடன் விளங்குகிறது.வழிதிண்டிவனத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. உப்புவேலுார் – காரட்டை செல்லும் பஸ்சில் சென்று, டி.பரங்கிணி என்ற ஊரில் இறங்கி குமுளம்பட்டு தலத்தை அடையலாம்.மன அமைதி தரும் வகையில், இயற்கை சூழலில் அமைந்துள்ள குமுளம்பட்டு திருக்கோவில் சென்று பேசும் பெருமாளாக அருள்புரியும் ஸ்ரீபத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட்டு, நம் குறைகள் நீங்கி, வாழ்வில் வளம் அனைத்தும் அடைந்து உயர்வோம்.கி.ஸ்ரீதரன்முன்னாள் துணை கண்காணிப்பாளர்தமிழக தொல்லியல் துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here