துள்ளி வரும் காளையும் அடக்கவரும் காளையும்

தமிழர்த் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை அவனியாபுரம், அலங்காநல்லூர் , பாலமேடு ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்துப் பெற்றவை.
இந்த மூன்றில் எப்போதும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுதான் முதலில், பெரும் பொங்கல் நாளன்று நடத்தப்படும். அதன்படி இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள், அவனியாபுரத்தில் ஆரம்பித்தன.
ஏக கம்பீரத்துடன் துள்ளி வரும் காளைகளை அடக்க, மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை உட்பட அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.இன்று காலை, போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்ற பின்னர், விளையாட்டு ஆரம்பமானது.

இன்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 430 மாடுபிடி வீரர்கள், 830 காளைகள் களத்தில் இருக்கின்றன. உடலில் காயங்கள் எதுவும் இல்லாத, நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் காளைகள் மட்டுமே களத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளன. அதேபோல, மாடுபிடி வீரர்களுக்கும் முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் தான் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, குறைந்த அளவிலான மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே ஒரு சமயத்தில் களத்தில் இறங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்க்க ஏராளமானோர் கூடியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இன்று அவனியாபுரத்துக்கு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிடுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here