2050ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா…

‘இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. வரும், 2030ல், பொருளாதார வளர்ச்சியில், ஜப்பானை இந்தியா முந்திவிடும்; மேலும், 2050ம் ஆண்டில், சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கும்’ என, பொருளாதார ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகும், ‘லான்செட்’ பத்திரிகையில், சர்வதேச நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியில், 2017ல், இந்தியா, ஆறாவது இடத்தில் இருந்தது.

இதை அடிப்படையாக வைத்து, பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஒவ்வொரு நாட்டிலும் பணிபுரியும் மக்களின் வயது, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டது. இதன்படி, 2030ல், சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில், ஜப்பானை பின்னுக்கு தள்ளி, நான்காவது இடத்தை இந்தியா பிடித்து விடும். இதன் தொடர்ச்சியாக, 2050ல், பொருளாதார வளர்ச்சியில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கொரோனா பரவலால் உலக நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டிலும், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழில்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், ‘பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்தை, 2050ல் பிடிக்கும்’ என, பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது, நம்பிக்கையை ஏற்படுத்திஉள்ளது. விரிவுபடுத்தப்படும் வேலை வாய்ப்பு திட்டம்உலகின் மிகப் பெரும் வேலை வாய்ப்பு திட்டமான, மஹாத்மா காந்தி கிராம வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு, தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால், பலர் வேலை இழந்துள்ளனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்களுக்கு, தங்கள் மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகளை வழங்க, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனால், கிராம வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கூடுதல் பணிகளை ஒதுக்கும்படி, மத்திய அரசுக்கு, சில மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து உள்ளன. இதையடுத்து, கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் பணி நாட்களை அதிகரிக்கவும், மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் திட்டத்தை விரிவு படுத்தவும், மத்திய அரசு முடிவு செய்துஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here