பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து…

பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து, சிதம்பரத்தில், பா.ஜ., மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த, போலீசார் தடை விதித்துள்ளனர். தடையை மீறி, இன்று(அக்.,27) ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, பா.ஜ., அறிவித்துள்ளது.ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல தரப்பிலும், திருமாவளவனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், திருமாவளவனை கண்டித்து, பா.ஜ., மகளிரணி சார்பில், தமிழகம் முழுதும், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் மாநில தலைவர், முருகன் அறிவித்துள்ளார்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா உள்ளிட்டோர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமாவளவன் எம்.பி.,யாக உள்ள சிதம்பரம் தொகுதியில், பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடந்தால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, உளவுத்துறை போலீசார், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், ஆளுங்கட்சி மேலிடத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, சிதம்பரம் பகுதியில், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். சிதம்பரம் பகுதிக்குள் பா.ஜ., தொண்டர்கள் உள்ளே செல்ல முடியாத வகையில், கடலுார் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இருந்து, நடிகை குஷ்பு இன்று காலை சிதம்பரத்திற்கு செல்ல உள்ளார். அவரை, போலீசார் வழியில் தடுத்து நிறுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, பா.ஜ.,வினர் கூறுகையில், ‘பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவனுக்கு, ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தடை விதித்தாலும், சிதம்பரம் உட்பட, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here