ஜப்பான் நாட்டின் அடையாளம்

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான விளையாட்டுகள் அடையாள மாக இருக்கும். அந்த வகையில் ஜப்பான் நாட்டுக்கு அடையாளமாக இருக்கும் விளையாட்டு சூமோ மல்யுத்தம். இந்த விளையாட்டின் பெயரைச் சொன்னாலே நம் நினைவுக்கு வருவது இடுப்பில் அரையாடை மட்டுமே அணிந்துகொண்டு, மல்யுத்த போஸில் நிற்கும் ஜப்பானிய குண்டு வீரர்கள் தான். அந்த அளவுக்கு ஜப்பான் நாட்டின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது சூமோ மல்யுத்தம்.

ஜப்பானில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சூமோ மல்யுத்தங்கள் நடந்து வந்திருப்பதாக அந்நாட்டின் வரலாறு கூறுகிறது. ஆரம்ப காலங்களில் பயிர் விளைச்சல் அமோகமாக இருக்க கடவுளை வேண்டுவதற்காக வயல் வெளிகளில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் இது பொழுதுபோக்குக்கான விளையாட்டாக மாறியுள்ளது.

சூமோ விளையாட்டின் விதி மிகவும் எளிமையானது. 4.57 மீட்டர் விட்டத்தைக் கொண்ட ஒரு வட்டத்துக்குள் நின்றுகொண்டு வீரர்கள் சண்டையிட வேண்டும். வட்டத்துக்குள் நிற்கும் வீரர்கள், தங்கள் எதிராளியை அந்த வட்டத்தில் இருந்து வெளியே தள்ளிவிட வேண்டும். அல்லது எதிராளியை தூக்கி வீசவேண்டும். அப்படிச் செய்தால் புள்ளிகளைக் குவித்து வெற்றி பெறலாம். அதேநேரம் கால்களைத் தவிர உடலின் ஏதாவது ஒரு பகுதி தரையில் பட்டால், சம்பந்தப்பட்டவர் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார்.

ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு மழைக்காலத்தின் இறுதியிலும் சூமோ மல்யுத்த வீரர்களுக்கு மதிப்பு கூடும். இக்காலத்தில் சூமோ வீரர்கள் வீட்டுக்குள் வந்து பீன்ஸ்களை எறிந்து, ‘பேய்களே ஓடிப்போய் விடுங்கள்; இந்த வீட்டை நல் அதிர்ஷ்டம் வந்து சேரட்டும்’ என்று கத்தினால், அவ்வீட்டின் பீடைகள் ஒழியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here