கோலாலம்பூர்:
பினாங்கில் நுரையீரல் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றுக்கான தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை வலுப்படுத்தும் நோக்கில், ‘தேசிய நுரையீரல் ஆரோக்கியத் திட்டத்தின்’ (National Lung Health Initiative) முதற்கட்ட மையமாகச் செபராங் ஜெயா சுகாதார கிளினிக் (Klinik Kesihatan Seberang Jaya) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய சுகாதார அமைச்சின் (MOH) இந்த புதிய திட்டத்தின் கீழ், மார்பு எக்ஸ்ரே (Chest X-ray) பரிசோதனைகளை மிக விரைவாகவும் துல்லியமாகவும் பகுப்பாய்வு செய்ய ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் நுரையீரல் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடியும் என்று பினாங்கு மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஃபதிலா ஷேக் அலாவுதீன் தெரிவித்தார்.
பினாங்கு மாநில அளவிலான ‘மலேசியா ஆரோக்கிய தேசிய நிகழ்ச்சி நிரல் 2026’ (ANMS) நடமாடும் பிரச்சாரத்துடன் இணைந்து நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தின விழாவில் உரையாற்றிய டத்தோ டாக்டர் ஃபதிலா:
“முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செபராங் ஜெயா கிளினிக்கில், நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி காசநோய் (TB), நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) மற்றும் ஆஸ்துமா போன்ற பிற நுரையீரல் சார்ந்த நோய்களைக் கண்டறிவதிலும் இந்த ஏஐ தொழில்நுட்பம் கவனம் செலுத்தும்.”
பினாங்கு மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் டேனியல் கோய் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்த இந்நிகழ்வில், இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதினர் மத்தியில் அதிகரித்து வரும் புகைப்பிடித்தல் மற்றும் நிக்கோடின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்க ‘ஜோம் குயிட்’ (JomQuit) திட்டம், புகை மறுப்பு கிளினிக்குகள் மற்றும் ‘சிக் எரா’ (Cik Era) எனப்படும் ஏஐ டிஜிட்டல் தளம் வழியாகச் சுகாதார அமைச்சு தொடர்ந்து ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை வழங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டது.
இந்தாண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளான “ஈர்ப்பின் முகமூடியைக் கிழிப்போம் — நிக்கோடின் மற்றும் புகையிலை அடிமைத்தனத்தை எதிர்ப்போம்” என்பதற்கேற்ப, புகையிலை மற்றும் வேப் (E-Cigarette) பொருட்கள் நவீனமானவையாகக் காட்டப்பட்டாலும், அவை இதயம், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன என்று எச்சரிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மை கணக்கெடுப்பின்படி (NHMS), பினாங்கில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரிடையே வேப் மற்றும் புகையிலைப் பயன்பாடு 14.3 விழுக்காடாக உள்ளது. அதாவது, பினாங்கில் உள்ள ஒவ்வொரு 7 பதின்ம வயதினரில் ஒருவர் இந்த ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது பெரும் கவலையளிப்பதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோடின் இளம் வயதிலேயே மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், குழந்தைகளையும் இளைஞர்களையும் இதிலிருந்து பாதுகாக்க பினாங்கு மாநில அரசு முழு ஆதரவை வழங்கும் என்று டேனியல் கோய் தனது உரையில் உறுதியளித்தார்.





















