மிகவும் பழமை வாய்ந்த ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, டாப்பாவாடா என்ற ஊர். இங்கு ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை ‘சோட்டா பண்டர்பூர்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் உள்ள பாண்டுரங்கன் சிலை, சுயம்புவாக தோன்றியதாகும். கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளது.

கோவிலின் முகப்பில் விநாயகர், சிவபெருமான், பார்வதிதேவி ஆகியோர் சிறுசிறு சன்னிதிகளில் தனித் தனியாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். அவர்களை வணங்கியபடி படிக்கட்டுக்களில் ஏறி கோவிலுக்குச் செல்ல வேண்டும். வழியில் ஞானேஸ்வரர், துக்காராம், ஷீரடி சாயிபாபா ஆகிய மகான்கள் வரிசையாக இருபுறமும் தரிசனம் தருகின்றனர். மூலவர் சன்னிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் விநாயகர், பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார், சிறிய திருவடி எனப்படும் ஆஞ்சநேயர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

இவர்களுக்கு நேர் எதிரில் உள்ள கருவறையில் பாண்டுரங்கன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பாண்டு ரங்கன் நின்ற நிலையில், இரு கரங்களையும் இடுப்பில் வைத்தபடி சேவை சாதிக்கிறார். பாண்டுரங்கனுக்கு இடதுபுறம் ரகுமாயி என்னும் ருக்மணி தாயார் நின்றபடி அருள்புரிகிறார். பண்டரிபுரத்தில் உள்ள இறைவனைப்போலவே, இத்தல பாண்டுரங்கனையும் பக்தர்கள் தொட்டு வணங்கலாம். பாண்டுரங்கனின் தலைப் பகுதியில் மல்லிகார்ஜூனர் (சிவன்) இருக்கிறார். இடுப்பில் கைவைத்தபடி இருந்தாலும், ஒரு கையில் தாமரைப் பூவையும், மற்றொன்றில் சங்கையும் இறுக்கிப் பிடித்திருக்கிறார், பாண்டுரங்கன். பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும், நம்மை பார்த்து சிரிப்பதுபோல் இந்த சிலை அமைந்திருப்பது மேலும் சிறப்பு வாய்ந்தது.

தல வரலாறு

பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கனின் மீது அதிக பக்தி கொண்ட ஒருவர், அடிக்கடி பண்டரிபுரம் சென்று இறைவனை தரிசித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அவருக்கு வயதான நிலையில், முதுமை காரணமாக அவரால் பண்டரிபுரம் செல்ல முடியாத நிலை உருவானது. ஒருநாள் அந்த பக்தனின் கனவில் தோன்றிய பாண்டுரங்கன், “உன் ஊரின் நதிக்கரையில் உள்ள கிணற்றில் நான் இருக்கிறேன். என்னை எடுத்து தரிசித்து வா” என்றாராம்.

இதையடுத்து சிலரின் உதவியுடன், குறிப்பிட்ட கிணற்றில் தேடியபோது, இறைவனின் சிலை கிடைத்தது. அதை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்கப்பட்டது. தானாக கிடைத்த விக்கிரகம் என்பதால் இந்தக் கோவில் ‘சோட்டா பண்டர்பூர்’ என்றும், அருகில் ஓடும் நதி ‘சந்திர பாகா’ என்றும் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தக் கோவில் பிரகாரத்தில் இயற்கையான மூலிகைச் சாறுகளின் வண்ணங்களைக் கொண்டு, பாண்டுரங்கனின் வரலாறு முழுவதும் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. கோவிலில் ஒரு பிரகாரம் முழுவதும் இத்தல பாண்டுரங்கனின் வரலாறுதான் சித்திரமாக காட்சியளிக்கின்றன. இத்தல இறைவனுக்கு சர்க்கரை பாகு கட்டிகளை, தேங்காய், பழத்துடன் நைவேத்தியமாக படைத்து, பின்னர் அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

இந்த ஆலயம் பழமை மாறாமல், ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் பாண்டுரங்கனை வழிபட்டால், நம் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here