
நடிகர் அக்ஷய் குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இன்னும் 3 தினங்களில் பதில் வரவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சுஷாந்த் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று உறுதி செய்தது. இதற்கு நடுவே பாலிவுட் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்கள் தான் சுஷாந்த் இறப்புக்கு காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவின.
இந்நிலையில் பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்பவர் நடத்தி வரும் எப்.எப்.நியூஸ் என்ற யூடியூப் பக்கத்தில் சுஷாந்த் தற்கொலை குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளியாகி வந்தன.
அதில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபூர்த்தி வெளிநாடு தப்பிச் செல்ல நடிகர் அக்ஷய் குமார் உதவியதாகவும், அவருக்கு சுஷாந்த் பாலிவுட் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும் ரஷித் ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.
அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அக்ஷய் குமார் மட்டும் அல்ல, பல முன்னணி பாலிவுட் நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் இவர் சுஷாந்த் மரணத்துடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தனக்கு 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ரஷித் தனக்கு அந்த பணத்தை வழங்க வேண்டும் என்றும் அக்ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதோடு தான் கூறிய தகவல்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.