நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சில முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு வந்தது. தற்போது விஷால் – ஐசரி கணேஷ் இரண்டு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் கட்டடப் பணிகள் பாதியிலேயே நிற்கிறது.

சென்னையில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டடப் பணிகளுக்கு எதிரிலேயே, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார் இருந்ததிலிருந்து இந்த இடத்தில் தான் நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இரண்டு அணிகளுக்கு இடையேயான மோதலால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழக அரசு நிர்வகித்து வருகிறது. இன்று (டிசம்பர் 7) காலை 4 மணியளவில் இந்த அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திடீரென்று புகை வருவதைப் பார்த்த காவலாளி, தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அனைத்துமே இந்த அலுவலகத்தில் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது. தீயை அணைத்துவிட்டு, உள்ளே இருந்த முக்கிய ஆவணங்களை மீட்டுள்ளனர். ஆனால், சில ஆவணங்கள் சேதமாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

தனி அலுவலர் இருந்த அறையில் தான், கடந்த ஆண்டு நடந்த தேர்தல் தொடர்பான ஆவணங்கள் இருந்துள்ளன. அதற்குப் பக்கத்து அறையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் விவரம், மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு தொடர்பான ஆவணங்கள் இருந்துள்ளன. எந்த ஆவணங்கள் சேதமாகியுள்ளது உள்ளிட்டவை குறித்து விரைவில் தெரியவரும். முதற்கட்ட தகவலில் மின்கசிவால் இந்த தீ விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here